புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு வந்த 11 பேருக்கு புதுச்சேரியில் கரோனா தொற்று

செய்திப்பிரிவு

புதுச்சேரி முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு வந்த 11 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விழாவுக்கு அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

புதுச்சேரியின் 20-வது முதல்வராக என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நேற்று பிறபகல் நடந்த விழாவில் பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்தவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ‘கரோனா தொற்று இல்லை’ என்ற சான்றுடன் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

இதற்காக ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள பாரதி பூங்கா வளாகத்தில் தற்காலிக கரோனாபரிசோதனை முகாம் அமைக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்காக இரு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இங்கு சான்று இல்லாமல் வந்தவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டது. எம்எல்ஏக்கள், அதிகாரிகள், காவலர்கள் என பதவியேற்பு விழாவுக்கு செல்லும் முன்பு அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர்.

இதில் 184 பேருக்கு கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், காவலர் இசைக்குழுவை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 9 காவலர்களுக்கும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேருக்கும் என 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து கரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்படாமல், திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், வீட்டில் தனிமையில் இருக்கும்படி கூறி,உரிய மருத்துவ அறிவுரையும்அவர்களுக்கு சுகாதாரத்துறையினரால் வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT