'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறையை உருவாக்கி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் சிறப்பு அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 07) தமிழக முதல்வராகப் பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப் பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை மு.க.ஸ்டாலின் அளித்திருந்தார்.
இந்நிலையில், முதல்வராகப் பதவியேற்ற பின்னர், தலைமைச் செயலகத்திற்குச் சென்று, கரோனா நிவாரண நிதி ரூ.4,000 அளிக்கும் விதமாக இந்த மாதமே ரூ.2,000 வழங்கும் அரசாணை, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமிக்கும் அரசாணை உள்ளிட்ட 5 அரசாணைகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
இதையடுத்து, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அரசாணை:
"முதல்வரின் தேர்தல் பிரச்சாரத்தில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களுக்குள் ஆய்வு செய்து, கோரிக்கைகளை நிறைவேற்றிட புதிய துறை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது.
இதன்படி, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறை தலைமைச் செயலகத்தில் உருவாக்கப்படுகிறது.
ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், இணைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற புதிய துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார். இவர் முதல்வரின் நேரடிக் கண்காணிப்பில் பணியாற்றுவார்".
இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷில்பா பிராபகர் சதீஷ் 2009ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி. சட்டத்துறையில் பட்டப்படிப்பை முடித்தவர். யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்று 2009ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் 46-வது இடத்தைப் பெற்றார். 2010ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணியைத் தொடங்கியவர், வேலூர் சார் ஆட்சியர், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு மே மாதம் திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராகப் பணியில் அமர்ந்தார். பாளையங்கோட்டையிலுள்ள அங்கன்வாடி மையத்தில் தனது மகளைச் சேர்த்து முன்மாதிரியாகத் திகழ்பவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் என்பது குறிப்பிடத்தக்கது.