புதுச்சேரி மாநிலத்தில் 4-வது முறையாக முதல்வராகி ரங்கசாமி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
புதுச்சேரியில் தேசியக் கட்சியான பாஜக, மாநிலக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டியது ரங்கசாமி என்ற தனி ஒரு நபரின் ஆளுமைக்காகத்தான். ரங்கசாமி புதுச்சேரி மக்களிடையே அதிகம் பரிச்சயமான அரசியல் தலைவர்களில் ஒருவர். அதற்குக் காரணம் அவர் எளிமையானவர் என்பதுதான். இந்த எளிமைதான் அவரைக் கடந்த 3 முறை மட்டுமல்லாமல் 4-வது முறையாகத் தற்போதும் முதல்வர் நாற்காலியில் அமர வைத்துள்ளது.
1950இல் ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்தவர் ரங்கசாமி. சொந்த ஊர் புதுச்சேரியில் உள்ள திலாசுப்பேட்டை. வணிகவியல் மற்றும் சட்டப்படிப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். காமராஜரைப் பின்பற்றுபவர். நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர். இளம் வயதில் காமராஜருக்கு மன்றமும் நிறுவியவர்.
தொடர்ந்து புதுச்சேரி முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாளுக்கு உதவியாளராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். ஒரு கட்டத்தில் அவரையே எதிர்த்து நிற்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். 1990 தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் 982 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அதற்கடுத்து 1991, 1996, 2001, 2006 வரை நடைபெற்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியின் நிரந்தர எம்எல்ஏவாக ரங்கசாமி வெற்றி பெற்றார். அந்தக் காலகட்டத்தில் 1991இல் அமைச்சராகவும், 2001 மற்றும் 2006இல் முதல்வராகவும் பதவி வகித்தார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் 2008 வாக்கில் பதவி விலகினார். அதன் பிறகு 2011 தேர்தலில் தன்னிச்சையாகப் புதிய கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை நிறுவினார். கட்சி தொடங்கி 48 நாட்களுக்குள் தேர்தலைச் சந்தித்து, ஆட்சியையும் பிடித்தார். மூன்றாவது முறையாக முதல்வராகவும் பொறுப்பேற்றார்.
2011 மற்றும் 2016 தேர்தலில் இந்திரா நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2011 தேர்தலில் கதிர்காமம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். பின்னர் அதை ராஜினாமா செய்தார். 2011 முதல் 2016 வரை புதுச்சேரி முதல்வராக இருந்தார். 2016 - 2021 காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
அவரது ஆட்சிக் காலத்தில் மாணவர்களுக்குக் காலை நேரத்தில் ரொட்டி- பால் வழங்கும் திட்டம், மூத்த குடிமக்களுக்கு உதவித்தொகை உயர்வு, புதுச்சேரியின் முக்கிய ஆலைகளை இயக்கியது, விவசாயிகளுக்காகத் திட்டங்களை அமல்படுத்தியது, பேரிடர்க் கால நிவாரணங்களை வழங்கியது ஆகியவற்றால் பெரிதும் பாராட்டப்பட்டார்.
தற்போது நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக பெரும்பான்மை பெற்ற நிலையில், புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராக ரங்கசாமி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் 4-வது முறையாக முதல்வராகி ரங்கசாமி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தின் 20-வது முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரியில் 1936 முதல் தற்போது வரை 20 பேர் முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ரங்கசாமி 4 முறை முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை எம்.ஓ.எச்.பரூக் 3 முறையும், வெங்கடசுப்பா ரெட்டியார், சுப்பிரமணியன், எம்.டி.ஆர்.ராமச்சந்திரன், சண்முகம், வைத்திலிங்கம் ஆகியோர் தலா 2 முறையும், எட்வர்ட் குபேர், ஜானகிராமன், நாராயணசாமி ஆகியோர் ஒரு முறையும் முதல்வராகப் பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.