கிஷன் ரெட்டி: கோப்புப்படம் 
தமிழகம்

புதுச்சேரியில் பாஜகவுக்குத் துணை முதல்வர் உட்பட 3 அமைச்சர்கள்: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தகவல்

அ.முன்னடியான்

புதுச்சேரியில் பாஜகவுக்கு ஒரு துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் பதவி ஏற்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துள்ளோம் என, மத்திய அமைச்சர் கிஷன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, புதுச்சேரியில் இன்று (மே. 07) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது பாஜகவுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த வெற்றிக்குப் பாடுபட்ட பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோரின் கடின உழைப்பு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, புதுச்சேரி மாநிலத்தை அனைத்து நிலைகளிலும் முன்னேற்றப் பாடுபடும்.

புதுச்சேரியில் தேர்தல் வாக்குறுதி அளித்ததைப் போல் தொழில், கல்வி, சுற்றுலா, ஆன்மிகம் ஆகியவற்றை முன்னேற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும். புதுச்சேரி மாநில மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராக ரங்கசாமி இன்று (மே 07) பொறுப்பேற்றுள்ளார்.

பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து பாஜகவுக்கு ஒரு துணை முதல்வர் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் பதவி ஏற்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துள்ளோம். என்.ஆர்.காங்கிரஸுக்கு 3 அமைச்சர்கள் பதவியேற்பார்கள்.

முதல்வர் பொறுப்பேற்றதையடுத்து, ஓரிரு நாட்களில் அமைச்சரவை பொறுப்பேற்கும். புதுச்சேரியில் அரசியல் மாற்றத்துக்கு, பொதுமக்களும், ஊடகங்களும் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். புதுச்சேரியில் கடந்தகால காங்கிரஸ் அரசு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் பாஜக கூட்டணி முதன்முதலாக ஆட்சி அமைக்கிறது.

தென்மாநிலங்களில் முதலில் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து, இரண்டாவதாக புதுச்சேரியிலும் ஆட்சி அமைப்பது, பாஜகவுக்குப் பெரும் மிகழ்ச்சியாகும். தமிழகத்திலும் தாமரை மலர்ந்து காலூன்றியுள்ளது. விரைவில் தெலங்கானாவிலும் பாஜக வளரும்.

மாநில அந்தஸ்து உள்ளிட்ட புதுச்சேரி மாநிலத்துக்குத் தேவையானதை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆலோசித்துச் செயல்படுத்தும்".

இவ்வாறு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT