தமிழகம்

புதிய சமூக நீதி வரலாற்றை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்: காதர் மொகிதீன் வாழ்த்து

ஜெ.ஞானசேகர்

தந்தை மு.கருணாநிதி வழியில் தப்பாமல் செல்லும் தனயனாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்றும், அமைச்சரவையில் 2 முஸ்லிம்களுக்கு முதல்வர் இடமளித்துள்ளதாகவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

’’முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் மு.கருணாநிதி ஆகியோர் தலைமையில் தமிழ்நாட்டில் 6 முறை ஆட்சியில் இருந்த உதயசூரியன், இன்று 7-வது முறையாக மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியைத் தொடங்கியுள்ளது. இந்த ஆட்சி, வரலாறு காணாத அற்புதங்களைப் படைக்க வாழ்த்துகள்.

தனது அமைச்சரவையில் அனைத்துச் சமூகத்தினருக்கும் இடம் அளித்து, புதிய சமூக நீதி வரலாற்றை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். காமராஜர், அண்ணா ஆகியோர் கால அமைச்சரவையில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. ஆனால், மு.கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 2 பேருக்கு இடம் அளிக்கப்பட்டது.

அந்தவகையில், தந்தை வழியில் தப்பாமல் செல்லும் தனயன் என்ற பெயர் பெற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது அமைச்சரவையில் முஸ்லிம்கள் 2 பேருக்கு இடம் அளித்துள்ளது, தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாய மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை, பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் சிறந்த நல்லாட்சியை வழங்க வேண்டும்’’.

இவ்வாறு காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT