தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக 200 ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரான குமார் ஜெயந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்துக்கு கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் குமார் ஜெயந்த் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கரோனா உதவி மையத்தை பார்வையிட்டார்.
தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவg கல்லூரி மருத்துவமனையில் உள்ள திரவ ஆக்சிஜன் சேமித்து வைக்கும் கொள்கலன் பகுதியை பார்வையிட்டு மருத்துவ அலுவலர்களிடம் ஆக்சிஜன் இருப்பு குறித்தும், ஆக்சிஜன் இணைப்புள்ள படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டு வருவது குறித்தும் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கரோனா நோயாளிகள் வகைப்படுத்தும் மையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் குமார் ஜெயந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்திலும் பாதிப்பு தினசரி 700-க்கு மேல் அதிகரித்துள்ளது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும், கரோனா பாதிப்புகளை அதிக பரிசோதனை மூலம் கண்டறிவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் தினசரி 3,000 பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் மூலம் 1000 பரிசோதனைகள் தினசரி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது 4000-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளனர். இவர்களில் அதிக பாதிப்பு உள்ளானவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவில்பட்டி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். ஊசி போட்டுக்கொள்வது அவசியமானது ஆகும். அதன் மூலம்தான் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு துறை அலுவலர்களை கொண்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500 எண்ணிக்கையிலான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. கூடுதலாக 200 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் தேவையான ஆக்சிஜன் இருப்பு உள்ளது. மேலும் தேவையெனில் உடனடியாக வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாவலன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் போஸ்கோராஜா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.