சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கருத்தரங்கில் கேள்வியெழுப்பிய பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்ற மாணவரை பல்கலைக்கழக பேராசி ரியர்கள், பணியாளர்கள் தாக்கினர். இதைக் கண்டித்து நேற்று போராட் டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி விரட்டினர். மாணவர்களில் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் பேரிடர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட மாநில தேர்தல் ஆணைய செயலர் ஜோதி நிர்மலாசாமி சென்னையில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக பேசினார். அப்போது பல்கலைக்கழக மாணவர் ஜோனஸ் ஆண்டன், “அரசின் சாதனைகளை பேசும் கூட்டமல்ல இது. பேரிடர் மேலாண்மை குறித்து பேசுங்கள்” என குரல் எழுப்பினார். அந்த மாணவரை பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்கள் வலுக்கட்டாயமாக அரங்கிலிருந்து வெளியேற்றி அடித்து உதைத்து நூலக அறையில் அடைத்து வைத்தனர்.
இந்த தகவலை கேள்விப்பட்ட சக மாணவர்கள் பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன்பு தர்ணா செய்தனர். பின்னர், துணைவேந்தருடன் போலீஸ் அதிகாரிகள், மாணவ பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். துணைவேந்தர் நடைபெற்ற சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததால் மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் மாணவர்களில் ஒரு பிரிவினர் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவரை தாக்கிய பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். மெரினா கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் மறியலில் ஈடுபட்ட மாணவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.
இதனால் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் ரஞ்சித் குமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 37 மாணவர்களை அண்ணா சதுக்கம் காவல்நிலைய போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சமுதாயக் கூடத்தில் அடைத்து வைத்தனர்.