முதல்வராக பொறுப்பேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நேர்மையான அதிகாரிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து சகாயம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
முதல்வராக பொறுப்பேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா பெருந்தொற்று தமிழகத்தை நிலைகுலையச் செய்திருக்கிறது. இந்தச் சூழலில் பதவியேற்கும் தாங்கள், கரோனா பரவலை வெகுவாக மட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் மக்களின் உயிரை காத்திட தேவையான தீவிரமான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக எடுக்க வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலங்களில் புறக்கணிக்கப்பட்டு, உரிய பதவி வழங்கப்படாத நேர்மையும், திறமையும் மிகுந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தகுதிக்கு ஏற்பஉரிய பணியிடம் வழங்கி, அவர்களுடைய அறிவையும், ஆற்றலையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலஉரிமைகளை நசுக்குகின்ற மத்தியஅரசுக்கு அடிபணியாமல், எந்தச்சூழலிலும் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்காமல், மக்களின் நல்வாழ்வை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
இவ்வாறு சகாயம் தெரிவித்துள்ளார்.