கோவை கங்கா மருத்துவமனையின் முதுகெலும்பு ஆராய்ச்சிக் குழுவினர், வட அமெரிக்க முதுகெலும்பு சங்க ஆராய்ச்சி அமைப்பின் மதிப்பு மிக்க விருதை 3-வது ஆண்டாக தொடர்ச்சியாக பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
கங்கா எலும்பியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையால் கோவையில் கங்கா ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டது. இது இந்திய அறிவியல், தொழில்நுட்ப துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மையமாகும்.
கங்கா ஆராய்ச்சி மையம் பல்வேறு மருத்துவ, அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகளை செய்துவருகிறது. இங்கு பேராசிரியர் டாக்டர் எஸ்.ராஜசேகரன் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் கடந்த பல ஆண்டுகளாக இடுப்பு வலி, முதுகெலும்பு காயங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். உலக அளவில் இந்த ஆராய்ச்சி மையம் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.
அந்த வகையில், வட அமெரிக்க முதுகெலும்பு சங்க ஆராய்ச்சி விருதை கங்கா மருத்துவமனையின் முதுகெலும்பு ஆராய்ச்சிக் குழு தொடர்ச்சியாக 3-வது ஆண்டாக பெற்று, சாதனை படைத்துள்ளது.
மதிப்புமிக்க இந்த விருதை வட அமெரிக்க முதுகெலும்பு சங்கம் (NASS), உலகப் புகழ்பெற்ற தி ஸ்பைன் ஜெர்னல் (TSJ) ஆகியவை இணைந்து வழங்குகின்றன. இந்த விருதுக்காக உலக அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற கட்டுரை தி ஸ்பைன் ஜெர்னலில் முக்கிய கட்டுரையாகவும் வெளியானது. மேலும் இந்த விருதுடன் ரூ.7.40 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.