ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்காவிட்டால் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
இந்த மண்ணின் மைந்தர்களின் உணர்வையும், பெருமைகளையும் வெளிப்படுத்தும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டபோது ‘தமிழ்நாடு ஜல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டம் 2009’ என்ற சட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது.
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன், ‘‘தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டப்படி உருவாக்கப்பட்ட பாதுகாப்பு முறைகளை கடைப்பிடிக்காமல் போட்டிகள் நடத்தப்பட்டன’’ என தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதிமுக அரசின் அலட்சியமே இதற்கு காரணம்.
49 எம்.பி.க்களை வைத்துள்ள அதிமுக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த செப்டம்பரில் நமக்கு நாமே பயணத்தின்போது அலங்காநல்லூரில் பேசும்போது, ‘‘ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எனது தலைமையில் போராட்டம் நடத்துவேன்’’ என உறுதி அளித்தேன்.
அதன்படி வரும் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் திமுக தலைவர் கருணாநிதியின் அனுமதியைப் பெற்று நானே தலைமையேற்று போராட்டம் நடத்துவேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.