தமிழகம்

கரூரில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 வினாத் தாள்களில் தனியார் கல்லூரிகளின் விளம்பரங்கள்: பெற்றோர், ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு

செய்திப்பிரிவு

கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய 10-ம் வகுப்பு, பிளஸ் 2 முன் அரையாண்டுத் தேர்வு வினாத் தாள்களில் தனியார் கல்லூரி விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தது மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக பள்ளிகளில் டிசம்பரில் நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி மாதத்துக்கு மாற்றி வைக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால் 10-வது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் நேற்று முன்தினம் தொடங்கி முன் அரையாண்டுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற 10-ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு வினாத் தாளின் முதல் பக்கத்தின் கீழ் பகுதியில் கரூரைச் சேர்ந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் விளம்பரமும், பிளஸ் 2 தமிழ் தேர்வு வினாத் தாளின் முதல் பக்கத்தின் கீழ் பகுதியில் கரூரைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரியின் விளம்பரமும் இடம்பெற்றிருந்தன. நேற்று நடந்த தேர்வுகளுக்கான வினாத் தாள்களிலும் இந்த விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.

இது மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்கள் இதுகுறித்த வாட்ஸ் ஆப் மூலம் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து ஆசிரியர்களிடம் கேட்டபோது, “ஆண்டொன்றுக்கு முழு ஆண்டு தேர்வு நீங்கலாக வினாத் தாள் கட்டணமாக 10-ம் வகுப்பு வரை ரூ.50, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ரூ.60 வசூலிக்கப்படுகிறது. 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் செலுத்தும் கட்டணம் மட்டுமே தோராயமாக ஆண்டுக்கு ரூ.12 லட்சம். ஆனால், வினாத் தாள் அச்சிட அவ்வளவு செலவாகாது.

மாணவர்களிடம் கட்டணம் வசூலித்துவிட்டு தனியார் கல்வி நிறுவனங்கள் மூலம் வினாத் தாளை அச்சிட்டு வழங்கி உள்ளனர். மாணவர்களிடம் வசூலித்த தொகை என்னவானது?” என்றனர்.

இதுகுறித்து கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமியிடம் கேட்டபோது, “தமிழகத்தில் அரையாண்டுத் தேர்வுகள் 1 மாதம் தள்ளிப்போய் உள்ள நிலையில் கரூர் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு இல்லாததால் 10-வது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் காலையில் வகுப்பும், மதியம் முன் அரையாண்டுத் தேர்வும் நடத்தப்படுகிறது. இது வழக்கமான நடைமுறையில் இல்லாத தேர்வு என்பதால் வினாத் தாளுக்கான கட்டணத்தை மாணவர்கள் மீது சுமத்த வேண்டாம் என்பதற்காக அனைவரின் முடிவின்படியே தனியார் கல்வி நிறுவனங்களிடம் ஸ்பான்சர் பெற்று வினாத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளன” என்றார்.

SCROLL FOR NEXT