திமுக அமைச்சரவைப் பட்டியல் இன்று வெளியான நிலையில் அதில் மூத்த, இரண்டாம் கட்டத் தலைவர்களான துரைமுருகன், ஐ.பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு சாதாரணத் துறைகள் வழங்கப்பட்ட நிலையில் அதிமுகவில் இருந்து சமீபத்தில் இணைந்தவர்களுக்குக் கூட முக்கியத் துறைகள் வழங்கப்பட்டுள்ளதால் திமுக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள நிலையில் இன்று மாலை அவரின் அமைச்சரவைப் பட்டியல் வெளியானது. ஸ்டாலினுடன் சேர்த்து மொத்தம் 34 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். இந்த அமைச்சரவைப் பட்டியலில், அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு மிக முக்கியத் துறைகள் வழங்கப்பட்டதாகவும், கட்சியிலேயே காலம் காலமாக இருந்து வரும் சீனியர்களுக்கு சாதாரணத் துறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் திமுகவின் அடிமட்டத் தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த எ.வ.வேலு, பி.கே.சேகர் பாபு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், செந்தில்பாலாஜி, ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், க.முத்துசாமி, ரகுபதி உள்ளிட்டவர்களுக்கு முக்கியத் துறைகள் வழங்கப்பட்டன. இதில், செந்தில்பாலாஜி அதிமுக அமைச்சரவையில் இருந்தபோது அவர் மீது திமுக அதிக விமர்சனங்களை முன்வைத்தது. தற்போது அவருக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை என்ற முக்கியத் துறை வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், அதிமுகவில் இருந்து வந்தவர்கள் அனைவருக்குமே முக்கியத் துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
திமுகவிலும் ஜூனியர் எம்எல்ஏக்கள் பலருக்கு முக்கியத் துறைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வித்துறை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தென் தமிழகத்தில் திமுகவில் முக்கிய இரண்டாம் கட்டத் தலைவரான திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.பெரியசாமிக்கு சாதாரண கூட்டுறவுத் துறை வழங்கப்பட்டுள்ளது. கருணாநிதி அமைச்சரவையிலே அவர் வீட்டு வசதித்துறை, பத்திரப்பதிவு துறை, வருவாய்த்துறை போன்ற முக்கியத்துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார். அதுபோல், மூத்த நிர்வாகியான துரைமுருகனுக்குக் கூட சாதாரண நீர்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது. இது, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் லேசான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தற்போது ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ள துறை தற்காலிகமானதுதான். அவரவர் செயல்பாடுகளைப் பொறுத்து ஜெயலலிதாவைப் போல் ஸ்டாலினும் அமைச்சரவையை அடிக்கடி மாற்றுவார். துறைகளையும் மாற்றுவார். அதுபோல், சீனியர் என்பதற்காக அவர்களுக்கு முக்கியத் துறைகளைக் கொடுத்து முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும், ஜூனியர் என்பவர்களுக்காக அவர்களை ஒதுக்கிவைப்பதும் முன்பு திமுகவில் இருந்தது. தற்போது இளைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவுமே அன்பில் மகேஷ் பொய்யாமொழி போன்றவர்களுக்கு முக்கியத் துறை வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறை நிர்வாகிகளையும் கட்சியில் வளரவிட வேண்டும். அவர்கள் ஆலோசனைகள் கட்சிக்கும், நாட்டிற்கும் தேவை என்பதால் ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளார். கடந்த கால திமுகவைப் போல் இல்லாமல் அமைச்சர்கள் அவரவர் இஷ்டத்திற்குச் செயல்பட முடியாது என்பதை உணர்த்துவது போலவே இந்த அமைச்சரவைப் பட்டியல் அமைந்துள்ளது.
அதிமுகவில் சிறப்பாகச் செயல்பட்டு, திமுகவிற்கு வந்த பிறகும் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள் என்பதற்காக அவர்களைப் புறக்கணித்துவிட முடியாது அல்லவா’’ என்று கூறினார்.