திமுக குறித்துப் பேசும்போது ஆரம்பத்திலிருந்தே ஒரு பேச்சு பொதுவாகப் பேசப்படும். அது அதிமுகவிலிருந்து வந்தவர்களே திமுகவில் பெரிய பதவியைப் பெறுகிறார்கள் என்பதே. அதை மெய்ப்பிக்கும் வண்ணம் திமுக அமைச்சரவையில் 8 பேர் முன்னாள் அதிமுகவினராக உள்ளனர்.
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த சில நாட்களிலேயே செந்தில் பாலாஜிக்கும், தங்க தமிழ்ச்செல்வனுக்கும் மாவட்டச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதற்கு முன் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், எ.வ.வேலு, சேகர் பாபு உள்ளிட்டோரைச் சொல்லலாம்.
இந்நிலையில் இந்தத் தேர்தலில் வென்று ஆட்சியமைக்கும் திமுகவில் அமைச்சராகப் பதவி ஏற்கும் 33 பேரில் 8 பேர், அதாவது 24% பேர் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்கள் ஆவர். இவர்களில் சிலர் முன்னரே திமுக அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் ஆவர்.
தற்போதைய அமைச்சரவையில் பொறுப்பேற்போரில் முன்னாள் அதிமுகவினர் குறித்த விவரம்:
1. எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர்
2. கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் - வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
3. எஸ்.ரகுபதி - சட்டத்துறை அமைச்சர்
4. முத்துசாமி - வீட்டுவசதித்துறை அமைச்சர்
5. அனிதா ராதாகிருஷ்ணன் - மீன் வளம், மீனவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.
6. ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத் துறை அமைச்சர்
7. செந்தில் பாலாஜி - மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
8. சேகர் பாபு - இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்
இவர்கள் 8 பேரும் மாஜி அதிமுகவினர் ஆவர். இவர்கள் அதிமுகவிலிருந்து வந்திருந்தாலும் திமுகவில் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமாக அமைந்தவர்கள். எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் அவர்கள் மாவட்டம் தாண்டி பக்கத்து மாவட்டங்களையும் கவனித்து திமுக வெற்றிக்குத் துணை நின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.