திருப்பத்தூர் அரசு மருத்துவமனை 
தமிழகம்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழப்பு; ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?- ஆட்சியர் மறுப்பு

ந. சரவணன்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவலில் உண்மையில்லை என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக 200 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜனுடன் சிகிச்சை அளிக்க 1.5 கிலோ லிட்டர் (கே.எல்.) கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. நோயாளிகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டால் அதற்கு ஏற்பக் கூடுதலாக 1.5 கே.எல். சிலிண்டர் வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 100-ஐக் கடந்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகி வருவதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முழுமையாக நிரம்பியுள்ளது.

கரோனா நோயாளிகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்டு வருவதால் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 1.5 கே.எல். ஆக்சிஜன் போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம், சின்னமூக்கனூர், ஆரிப் நகர், தகரக்குப்பம் மற்றும் விஷமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 4 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். நேற்றிரவு ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந்து விட்டதாக அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து வந்த தகவலின் பேரில் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திலீபன் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இதில், போதுமான அளவுக்கு ஆக்சிஜன் கையிருப்பு இருப்பதாகவும், உயிரிழந்த 4 பேரும் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளதாகவும் மருத்துவமனையில் கூறினர். இருந்தாலும் இதை ஏற்காத உறவினர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால்தான் 4 பேரும் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டி மருத்துவப் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திலீபன் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் உள்ளது. நேற்று முன்தினம் 2 கே.எல். ஆக்சிஜன் மருத்துவமனைக்கு வந்தது. உயிரிழந்த 4 பேரும் வெவ்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதைச் சிலர் ஆக்சிஜன் பற்றாக்குறை என வதந்தி பரப்பிவிட்டனர்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு, பகல் பாராமல் மருத்துவர்களும், செவிலியர்களும் ஓய்வின்றிப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பு என்ற உண்மைக்குப் புறம்பான செய்தி அவர்களை வருத்தமடையச் செய்வதாக உள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 4 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அதன் உண்மை நிலையை அறிய தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் வதந்தி.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நேரிடுவதாக இருந்தால் அது ஒரே நேரத்தில் நடைபெற்று இருக்கும். மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் ஏற்படுவதாக இருந்தால் உயிரிழப்பு அதிகமாக இருந்திருக்கும். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள மரணங்கள் வெவ்வேறு நேரங்களில் நிகழ்ந்துள்ளன. எனவே, அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கவில்லை என்பதே உண்மை.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 933 நபர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஒரு உயிரிழப்பு கூட நடைபெறக் கூடாது என்பதால் மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடையே சேவையைக் கொச்சைப்படுத்தக் கூடாது.

திருப்பத்தூர் மாவட்டத்துக்குப் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு உள்ளது. தேவைப்படும் ஆக்சிஜன் எங்களுக்குத் தடையின்றிக் கிடைக்கிறது. இதுதவிர திருப்பத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் 4 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்க எல் அண்ட் டி நிர்வாகத்துடன் பேசி வருகிறோம். அதில், 1,000 கே.எல். திறன் கொண்ட ஆலை, 500 கே.எல். திறன் கொண்ட ஆலை அமைக்கவும் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

அதேபோல, அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தினமும் 200 நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வருவதால் மருத்துவமனையில் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம். அதேநேரத்தில், நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களைக் கூடுதலாக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT