தமிழகம்

‘இந்து தமிழ்’ செய்தி எதிரொலி; கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?- சுகாதாரத் துறைச் செயலர் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்துகள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் இருப்பு குறித்தும் சுகாதாரத் துறை செயலர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரெம்டெசிவிர் மருந்து மற்றும் வெண்டிலேட்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது குறித்தும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறித்தும், ‘இந்து தமிழ்’நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. இந்த செய்தியின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும் அதிகாரிகள் அவர்கள் வேலையை செய்துகொண்டு இருக்கின்றனர். தற்போது ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா, பொதுமக்களை நீண்டநேரம் காத்திருக்க வைப்பதன் அவசியம் என்ன, அதேபோல கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் மருந்து அதிக விலைக்கு விற்கப்படுகிறதா, அப்படி விற்கப்பட்டால்அதை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன், ‘‘தமிழகத்துக்கு கடந்த ஏப்.21 முதல் மே 9 வரையிலான காலகட்டத்துக்கு 1 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன’’ என்றார். அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறைச் செயலர் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு (மே 6) தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT