தமிழகம்

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்த விஜயகாந்த் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது அவசியம். மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை என வெளியாகும் தகவல்கள் வேதனையளிக்கின்றன.

போதிய சிகிச்சையின்றி நாள்தோறும் பலர் உயிரிழந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆங்காங்கே முகாம்கள் அமைத்து, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரோனாவைக் கட்டுப்படுத்த கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுபோல, இந்த ஆண்டும் முழு ஊரடங்கை அறிவித்து, போதிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும்.

மேலும், ஒரு மாதத்துக்கு டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக அடைத்து வைப்பதே சிறந்த வழியாகும். வாக்குப்பதிவின்போது கைவிரலில் மை வைப்பதுபோல, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் அடையாள மை வைத்தால், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை எளிதாக அடையாளம் காணமுடியும்.

இதன்மூலம் தடுப்பூசி போடாதவர்களை எளிதில் கண்டறிந்து, தடுப்பூசியை போட முடியும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT