பெட்ரோல், டீசல் விலையை 2-வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன் வடமாநிலங்களில் பெட்ரோல் விலை அதிகபட்சமாக ரூ.100-ஐ தாண்டி விற்பனை ஆனது. தமிழகத்தில் ரூ.92-க்கு மேல் விற்கப்பட்டது.
இந்நிலையில் 5 மாநில தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி விற்கப்பட்டு வந்தது.
தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தத் தொடங்கியுள்ளன. சென்னையில் நேற்றுமுன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.92.55-க்கும், டீசல் லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து ரூ.85.90-க்கும் விற்பனை ஆனது.
இதனிடையே, 2-வது நாளாக நேற்றும் விலை உயர்ந்தது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து ரூ.92.55-க்கும், டீசல் லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து ரூ.86.09-க்கும் விற்பனை செய்யப்பட்டது.