தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு தனிச் செயலர்களாக உதயசந்திரன், உமாநாத், சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அடுத்த தலைமைச் செயலராக இறையன்பு நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 10 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்கிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்த கடிதத்தை, அவர் நேற்று ஆளுநரிடம் வழங்கினார். ஆளுநரும் அவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார். இந்நிலையில், நாளை காலை 9 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
முதல்வர் பொறுப்பேற்பு
பின்னர், காலை 11 மணிக்கு தலைமைச் செயலகம் வரும் ஸ்டாலின் முதல்வர் பொறுப்பை ஏற்று, முக்கியமான திட்டங்கள் தொடர்பான கோப்புகளில் கையெழுத்திடுகிறார். அன்றே அமைச்சர்களும் தங்கள் அலுவலகங்களில் பொறுப்பேற்கின்றனர்.
இந்நிலையில், முதல்வரின் தனிச் செயலர்களாக ஐஏஏஸ் அதிகாரிகள் சிலர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, முதல்வரின் செயலர் நிலை -1ஆக தொல்லியல் துறை ஆணையர் த.உதயசந்திரன், நிலை-2ஆக தமிழ்நாடு மருத்துவ சேவைக்கழக மேலாண் இயக்குநர் டாக்டர் உமாநாத், நிலை-3ஆக ஃபைபர் நெட் நிறுவன இயக்குநர் சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களாக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அரசு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் இவர்கள் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக தலைமைச் செயலராக உள்ள ராஜீவ் ரஞ்சன், கடந்த ஜனவரி இறுதியில் நியமிக்கப்பட்டார். அவருக்கு இன்னும் சில மாதங்களே பதவிக்காலம் உள்ள நிலையில், அவர் மாற்றப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
அதேநேரம், அடுத்த தலைமைச் செயலராக, தற்போது அண்ணா மேலாண்மை நிறுவன பொது இயக்குநராக உள்ள வெ.இறையன்பு நியமிக்கப்படலாம் என்றும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.