தமிழகம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் எதிரொலி: ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளை கைப்பற்ற திமுக திட்டம்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளைக் கைப்பற்ற திமுக நிர்வாகிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

திமுக ஆட்சியை பிடித்ததால் அரசு நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றம் உள்ளாட்சி நிர்வாகத்திலும் எதிரொலிக்கும். இதற்கேற்ப மதுரை மாவட்ட உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்ற திமுக நிர்வாகிகள் திட்டம் தீட்டி வருகின்றனர்.

தேர்தலுக்கு முன்பே அதிமுக கவுன்சிலர்கள் சிலரை, தங்கள் அணியில் சேர்த்தனர். உள்ளாட்சியில் தலைமைப் பதவியைப் பெற்றுத்தருவதாகக் கூறி மறைமுகமாகப் பலரின் ஆதரவைப் பெற்றனர்.

மதுரை மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை ஏற்கெனவே திமுக கைப்பற்றிவிட்டது. ஒன்றியங்களின் தலைவர் பதவியில் அதிமுகவைச் சேர்ந்த பலர் உள்ளனர். இந்த இடங்களில் திமுகவை தலைமைப் பதவிக்குக் கொண்டுவரும் முயற்சியில் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து திமுகவினர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம், அலங்காநல்லூர், சேடபட்டி ஆகியவற்றில் திமுகவே தலைவர் பதவியைப் பிடித்தது.

கொட்டாம்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, திரு மங்கலம், கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியது. வாடிப்பட்டி, மேலூர் ஒன்றியங்களில் அதிமுகவுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், ஆளுங்கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிமுக கைப்பற்றியது.

கொட்டாம்பட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி, செல்லம்பட்டியில் மட்டுமே அதிமுக கணிசமான இடங்களைப் பெற்றது. மற்ற ஒன்றியங்களில் மற்ற கட்சி கவுன்சிலர்களே அதிகம் உள்ளனர். இந்த இடங்களை திமுக எளிதில் கைப்பற்றிவிடும். அதிமுக அதிக இடங்களில் வென்ற ஒன்றியங்களிலிருந்து பலர் திமுகவுக்கு வரத் தயாராக உள்ளனர்.

எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் திமுகவே தலைவர் பதவியை வகிக்க வேண்டும். இதற்கு அதிமுகவினர் ஒத்துழைக்காவிட்டால், அந்த உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுகவினருக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்காது. இதை உணர்ந்தே பலரும் திமுகவுக்கு ஆதரவு அளிக்கத் தயாராகி வருகின்றனர். 13 ஒன்றியங்களிலும் தலைவர்களாக திமுகவினரே இருக்கும் நிலையை நிச்சயம் உருவாக்குவோம், என்று கூறினர்.

SCROLL FOR NEXT