தமிழகம்

கரோனா தொற்றாளர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்; ‘வாட்ஸ்-அப்’-ல் வழிகாட்டும் மருத்துவக் குழு: வீட்டிலிருந்தபடியே இலவசமாக ஆலோசனை பெறலாம்

செய்திப்பிரிவு

கரோனா தொற்று அதிகரிப்பால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழியும் நிலையில் பொது மக்களுக்கு உதவவும், கரோனா தொற்றாளர்களை வகைப்படுத்தி சிகிச்சைக்கான வழிகாட்டவும் தன்னார்வ மருத்துவர்கள் இணைந்து வாட்ஸ்-அப் குழுவை செயல்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் 2-வது அலையின் தாக்கத்தால் தற்போது நாளொன்றுக்கு 20,000 பேருக்கு மேல் பாதிக்கப்படுகின்றனர். 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் ஆக்சிஜனுடன்கூடிய படுக்கைகள் கிடைப்பது சவாலாகிவிட்டது. இதனால் செய்வதறியாது பொதுமக்கள் மிகுந்த இன்னல் களைச் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக் களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் பல்துறை மருத்துவ நிபுணர்கள், யோகா மற்றும் சித்த மருத்துவர்கள், சட்டம் சார்ந்த மருத்துவர்கள், அரசு மருத்துவமனைகளின் ஆர்.எம்.ஓ.க்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள், நகர்நல அலுவலர்கள் உள்ளிட்டோர் இணைந்து ‘தமிழினி-கோவிட் டீம்’ என்ற வாட்ஸ் அப் குழுவை தொடங்கி, அதன்மூலம் கரோனா தொற்றாளர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து இக்குழுவின் அட்மினான மருத்துவர் வீ.சி.சுபாஷ் காந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

தற்போது கரோனாவால் பாதிக்கப்படுவோர் ஒரே சமயத்தில் மருத்துவமனைகளில் குவிவ தால் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. உண்மை யில், கரோனாவால் பாதிக்கப் படும் அனைவருமே மருத்துவ மனைகளில் அட்மிட் ஆக வேண்டியதில்லை. பாதிப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு மட்டுமே ஆக்சி ஜனுடன்கூடிய சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால் பாதிப்பின் அளவை பொதுமக்கள் தாங்களா கவே தெரிந்து கொள்ள முடியாது. எனவே அவர்கள் பதற்றத்தில் மருத்துவமனைகளைத் தேடிச் செல்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு ஏற் படக்கூடிய மன உளைச்சல், அலைச்சல், பண விரயம், பயம், பதற்றம் ஆகியவற்றை தவிர்க் கவும், பாதிப்பின் தன்மைக்கேற்ப கரோனா தொற்றாளர்களை வகைப்படுத்தி, அவர்களுக்கு வழிகாட்டவும் தன்னார்வ மருத்துவர்களைக் கொண்டு இக்குழு உருவாக்கப் பட்டுள்ளது.

இக்குழுவில் கரோனா தொடர் பான சந்தேகங்கள், ஆர்டிபிசிஆர் மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனை அறிக்கை விவரங்கள், மருத்துவ உதவி மற்றும் சிகிச்சைகள் போன் றவை குறித்து 9786605092 என்ற வாட்ஸ் அப் எண்ணில் பொதுமக்கள் கேள்வி கேட்கலாம். அதுகுறித்த விவரம் உடனடியாக ‘தமிழினி கோவிட் டீம்’ குழுவில் பகிரப்பட்டு, தொடர்புடைய துறை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று உடனடியாக சம்பந்தப்பட்ட நபருக் குத் தெரிவிக்கப்படும்.

லேசான அறிகுறியாக இருந் தால், அதற்குண்டான மருந்துகள், மாத்திரைகள் குறிப்பிடப்படும். கடும் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டால் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும், அருகில் எந்த மருத்துவமனைகளில் படுக்கை வசதி உள்ளது என்பது குறித்த விவரங்களை குழுவிலுள்ள மருத்துவர்கள் மூலமாக அவர்களுக்குத் தெரிவிக்கிறோம். பல துறை களின் மருத்துவர்கள் ஒரே இடத்தில் இருப்பதால், தொற்றாளர் களின் கேள்விகளுக்கு உடனடி யாக அவர்களிடமிருந்து பரிந்துரை களைப் பெற்று அனுப்பி வைக்க முடிகிறது. சித்த மருத்துவர்களும் இருப்பதால், இயற்கை வைத்திய முறைகள் குறித்தும் உரிய விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

எனவே, கரோனா அறிகுறிகள் குறித்த தெளிவு, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்ற இணை நோய்களால் பாதிப்பு, மனநல ஆலோசனை, கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை, நுரையீரல் பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு இலவசமாக ஆலோ சனை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

SCROLL FOR NEXT