தமிழகம்

தமிழக அமைச்சரவையில் நெல்லையிலிருந்து யாருக்கு இடம்?

அ.அருள்தாசன்

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்துள்ள நிலையில், அமைச்சரவையில் யார் யாருக்கெல்லாம் இடம்என்பது குறித்து பல்வேறு பட்டியல்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அமைச்சரவையில் இடம்பெறவுள்ள திமுக எம்எல்ஏ யார்என்ற கேள்வி கடந்த சில நாட்களாக அக்கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் எழுப்பப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக சார்பில் ராதாபுரம் தொகுதியில் மு.அப்பாவு, பாளையங்கோட்டை தொகுதியில் அப்துல்வகாப் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது. அம்பாசமுத்திரம் தொகுதியில் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ள நிலையில் கட்சியில் திருநெல்வேலி, தென்காசிமாவட்டங்களுக்கான அமைச்சரவை பிரதிநிதியாக அப்பாவு தேர்வு செய்யப்படுவார் என்று திமுக தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ராதாபுரம் தொகுதியில் தமாகாசார்பில் ஒருமுறையும், சுயேச்சையாக ஒருமுறையும், திமுக சார்பில் 2 முறையும் போட்டியிட்டு இவர் வெற்றிபெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் திமுகஆட்சியில் இல்லாத நிலையில்அக் கட்சி சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று கருத்துகளை தெரிவித்து வந்துள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு எதிராக பல்வேறு வழக்குகளையும் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். அதில்,பல்வேறு வழக்குகள் தற்போது விசாரணை நிலையில் உள்ளன.அதிமுக அரசின் செயல்பாடுகளை குறித்து மக்கள் மன்றத்தில் தெரிவிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக தகவல் அறியும் உரிமைசட்டத்தின்கீழ் ஏராளமான தகவல்களை பெற்று கட்சி தலைமைக்கு அளித்துள்ளார். கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஏராளமான பொருட்களை கொள்முதல் செய்ததில் உள்ளாட்சித்துறையில் முறைகேடுகள் நடைபெற்றதாக தெரிவித்து, இவர் வழக்கு தொடர்ந்துள்ளதால் நடைபெற்று முடிந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அப்பாவு வெற்றிபெற கூடாது என்று, அதிமுக அமைச்சர்களும் கங்கணம் கட்டிக்கொண்டு பணியாற்றினர்.

அவற்றை முறியடித்து அப்பாவு வெற்றிபெற்றுள்ளது அவரது கட்சி தலைமைக்கு மகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போது திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் அப்பாவுவின் பெயரை பலமுறை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். கடந்த 2016 -ல் ராதாபுரம் தொகுதி சட்டப்பேரவை தேர்தல் வெற்றி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் நியாயம் கிடைக்க அப்பாவு போராடுவது குறித்தும் கட்சி தலைமைக்கு தெரியும்.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் அமைச்சரவையில் அப்பாவுக்கு இடம் நிச்சயம் என்று,அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி, திமுகவினரும் தெரிவித்துவருகிறார்கள். தமிழக அமைச்சரவையில் இஸ்லாமியர் ஒருவருக்கு இடம் கொடுக்கப்படும் என்பதால் பாளையங்கோட்டை தொகுதியில் புதுமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அப்துல்வகாபுக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT