விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் தென்காசி மாவட்டத்தில் கூடுதல் மழைமானிகள் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டம், விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள் அதிக அளவில் மழைப்பொழிவை பெறுகின்றன. சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், வீரகேரளம்புதூர் உள்ளிட்ட பகுதிகள் போதிய மழையை பெறுவதில்லை. அந்தந்த பகுதிகளில் உள்ள மழைமானிகளில் பதிவாகும் மழை அளவு விவரங்கள் அரசுக்கு தெரிவிக்கப்படுகிறது. இதுவே, ஒரு பகுதி மழை அதிகமாக பெய்தபகுதியா, வறட்சிப் பகுதியா என்பதை அறிந்து வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் போன்ற பணிகளை மேற்கொள்ள அரசுக்கு உதவியாக இருக்கும்.
ஆனால், தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழைமானிகள் இல்லாதால் மழைஅளவு விவரங்கள், வறட்சி நிலவரங்களை தெரிந்துகொள்ள முடியாமல் போகிறது. வெள்ளம், வறட்சிக் காலங்களில் விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. தென்காசிக்கு அடுத்து கிழக்கிலும், தெற்கிலும் மாவட்டத்தில் எந்த பகுதியிலும் மழைமானி இல்லை. தென்காசிக்கு அடுத்துவடக்கில் சிவகிரியில் மட்டுமேமழைமானி உள்ளது. இடைப்பட்ட பகுதிகளில் புளியங்குடி, கடையநல்லூர் நகராட்சிகளில் மழைமானி இல்லை. சங்கரன்கோவில் தவிர மாவட்டத்தில் இருக்கும் மற்ற அனைத்து மழைமானிகளும் மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மட்டுமே உள்ளது.
தாலுகா தலைநகரான ஆலங்குளத்தில் உள்ள மழைமானி பலஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கிறது. மற்றொரு தாலுகா தலைநகரான வீரகேரளம்புதூரில் மழைமானி இல்லை. ஆலங்குளத்தில் உள்ள மழைமானியை பழுதுபார்க்க அல்லது புதிதாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வீரகேரளம்புதூர், கடையம், பாவூர்சத்திரம், புளியங்குடி, கடையநல்லூர், சுரண்டை, போன்ற பகுதிகளில் மழைமானி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந் துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆர்வலர் ராஜா கூறும்போது, “மழைமானி இருந்தால்தான், பருவமழைகாலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை முன்னெச்சரிக்கையுடன் தடுக்கலாம். வீரகேரளம்புதூர், ஆலங்குளம் தாலுகாவில் மழைமானி இல்லை. வானிலை சார்ந்த ஆராய்ச்சிகளை தெரிந்துகொள்ளவும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் பெரிதும் உதவும்.
ஒரு பகுதியில் பதிவாகும் மழையின் அளவைக்கொண்டு மழை பாதிப்பு நிவாரணம் மற்றும் வறட்சிநிவாரணம் அளிக்கவும் பயனுள்ளதாக இருக்கும். மலைப்பகுதியில் மழைமானி மிகவும் அவசியமானது. ஒரு வேளை 200 மி.மீ.க்கு மேல்மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டால்கூட மக்களுக்கு தெரியாமல் போய்விடும்.
ஒரு தாலுகாவுக்கு ஒரு மழைமானியாவது வேண்டும். புளியங்குடி, சுரண்டை, வீரகேரளம்புதூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையம், ஆழ்வார்குறிச்சி, சுரண்டை பகுதிகளில் மழைமானி வைப்பது உதவியாக இருக்கும். மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் மேக்கரை பகுதியிலும் மழைமானி அவசியம்.
தென்மேற்கு பருவக்காற்று செங்கோட்டை கணவாய் வழியாக அதிகளவில் வரும். காற்றின் வேகம் மிகஅதிகமாக இருக்கும். எனவே, தென்காசியில் தானியங்கி வானிலை மையம் அமைப்பது அவசியம். அவ்வாறு வைத்தால் சமீபத்திய மழை அளவு, காற்றின் வேகம் போன்ற விவரங்களை மக்கள் அனைவரும் இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலை மலைப்பகுதி தமிழகத்தில் அதிகமான மழை பெய்யும்பகுதிகளில் ஒன்று. அங்கும் மழைமானி அமைக்க வேண்டும்.இதேபோல், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் தென் மாவட்டங்களில் 80 மழைமானிகள் உள்ளன. அவற்றில் பெரும் பாலானவை செயல்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
புளியங்குடி, சுரண்டை, வீரகேரளம்புதூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையம், ஆழ்வார்குறிச்சி, சுரண்டை பகுதிகளில் மழைமானி வைப்பது உதவியாக இருக்கும்.