ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்களைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் கல்பனாவுக்கு இன்று கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே வாடகைக்கார் நிறுத்துமிடத்தில் நின்றிருந்த கார் ஒன்றில் போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது காரில் டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த புதுச்சேரி, வில்லியனூர், ஆச்சார்யாபுரம், ஓம் கணபதி நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் விபவதேவர் (35) என்பவரை போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டர்.
விசாரணையில் அவர் தன்னை மருத்துவர் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் செஞ்சி அருகே நாட்டார்மங்கலத்தில் மருத்துவமனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், காரில் இருந்த திண்டிவனம், உழவர் சந்தைமேடு பகுதியைச் சேர்ந்த செல்வநாயகம் மகன் முத்துராமன் என்பரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மருந்தாளுநராகப் பணியாற்றுவதாகக் கூறியுள்ளார். அவர்களிடமிருந்து கரோனா தொற்றாளர்களுக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து 5 பாட்டில்களை தலா ரூ.19 ஆயிரத்திற்கு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யக் கொண்டு செல்வதாகத் தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரையும் போலீஸார் விழுப்புரம் தாலுக்கா போலீஸில் ஒப்படைத்தனர். மேலும் மருந்து பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். இதையடுத்து விழுப்புரம் தாலுக்கா போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.