கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. நாளை முதல் மே 20 வரை ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் அமலாவதை அடுத்து தமிழகத்தை 9 மண்டலங்களாகப் பிரித்து 9 காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பரவலை அடுத்து தமிழகத்தில் அமலான தளர்வுகள் நீக்கப்பட்டு கட்டுப்பாடுகள் அமலாகின. ஏற்கெனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் நாளை (மே 6) முதல் மே 20 வரை மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாகின்றன.
ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்கும் மே 7ஆம் தேதி அன்று மாலையே மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கிடையே தமிழகத்தில் கரோனா தொற்றைக் கண்காணிக்க ஏடிஜிபிக்கள், ஐஜிக்கள் அளவிலான அதிகாரிகளைக் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் 38 மாவட்டங்களை 9 மண்டலங்களாகப் பிரித்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் விவரம் வருமாறு:
1 சென்னை மண்டலம் (டீம்-1 சென்னை நகரம், டீம்-2 திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) - எச்.எம்.ஜெயராம், ஐஜி - காத்திருப்போர் பட்டியல்.
2. வேலூர் மண்டலம் (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை) - சாரங்கன், ஐஜி - காவல் பயிற்சி.
3. விழுப்புரம் மண்டலம் (விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி) - பாண்டியன், விழுப்புரம் சரக டிஐஜி.
4. சேலம் (சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்) - தினகரன், ஐஜி - காத்திருப்போர் பட்டியல்.
5. கோவை மண்டலம் (கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி) சஞ்சய் குமார், ஐஜி - தொழில்நுட்பப்பிரிவு.
6. திருச்சி மண்டலம் (திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர்) - அம்ரேஷ் புஜாரி, ஏடிஜிபி - தொழில் நுட்பப்பிரிவு.
7. தஞ்சை மண்டலம் (தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை) - லோகநாதன், ஐஜி - காத்திருப்போர் பட்டியல்.
8. மதுரை (மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை) - சைலேஷ்குமார் யாதவ், ஏடிஜிபி - சமூக நலன் மற்றும் மனித உரிமை.
9. நெல்லை (தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி) - முருகன், ஐஜி - நவீனமயமாக்கல் பிரிவு.
மேற்கண்ட அதிகாரிகள் 9 மண்டலங்களில் கரோனா கண்காணிப்புப் பணியைக் கண்காணிப்பார்கள்.