புதுச்சேரி முதல்வராக என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வரும் 7ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்கள் பிடித்துப் பெரும்பான்மை பெற்றது. இதைத் தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக, அக்கட்சியின் தலைவர் ரங்கசாமியை ஒருமனதாகத் தேர்வு செய்தனர். இதேபோல், பாஜக எம்எல்ஏக்கள் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக முடிவு செய்தனர்.
இதனிடையே கடந்த 3-ம் தேதி மாலை ரங்கசாமி தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள், புதுச்சேரி துணை நிலை ஆளுநரைச் சந்தித்தனர். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அந்தச் சந்திப்பின்போது, ரங்கசாமி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான என்.ஆர் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் 16 பேரின் ஆதரவுடன் கூடிய கடிதத்தை வழங்கி, ஆட்சி அமைக்க ரங்கசாமி உரிமை கோரினார்.
அக்கடிதத்தைப் பெற்ற ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், ரங்கசாமி கூறும் நாளில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று தெரிவித்தார். இந்நிலையில் இன்று சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி ஆலயத்துக்குச் சென்று ரங்கசாமி வழிபட்டார். பின்னர் புதுச்சேரி திரும்பினார்.
இந்நிலையில் இன்று (மே. 5) இரவு துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் செயலாளர் ஜெயபால், கட்சி நிர்வாகி பக்தவச்சலம் ஆகியோர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்து மே 7-ம் தேதி பிற்கபல் 1.20 மணிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் ரங்கசாமி முதல்வராகப் பதவி ஏற்பதற்கான கடிதத்தை வழங்கினர். அன்றைய தினமே அமைச்சர்களும் பதவி ஏற்பார்கள் எனத் தெரிகிறது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த செயலாளர் ஜெயபால், ‘‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் முதல்வராக ரங்கசாமி 7-ம் தேதி பிற்பகல் 1.20 மணிக்குப் பதவியேற்க உள்ளார். அதற்கான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினேன்’’ என்று தெரிவித்தார்.
கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகை அல்லது புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தி திடல் அருகே எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே புதுச்சேரியில் ஆட்சி அமைக்க ஆளுநர் தமிழிசை, ரங்கசாமிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கும் நிலையில், பதவியேற்பு விழா நடைபெறும் இடம் உள்ளிட்ட அதிகாரபூர்வத் தகவல் குறித்துத் தெரியவரும். புதிய முதல்வர் பதவியேற்பதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.