தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரிய வழக்கு, தமிழகம் முழுவதும் சித்தா மற்றும் ஆயுர்வேதா கிளினிக்குகள் அமைக்கக் கோரிய வழக்கு, தமிழகம், புதுவையில் எடுக்கப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை நாளை விசாரணைக்கு வருகின்றன. நாளை இரு அரசுகளும் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் ஒரு நாளைக்கு 1,200 பேர் கரோனா தொற்றால் பாதிப்படைவது அபாயகரமானது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த முழுமையான அறிக்கையைத் தாக்கல் செய்ய புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
ரெம்டெசிவிர் மருந்துப் பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து விசாரிக்கும் வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, புதுச்சேரி அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 3 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் மூலம் 82 டன் கிடைப்பதாகவும், தேவை என்பது 20 டன்னாக இருப்பதால் பற்றாக்குறை இல்லை என்றும் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, சென்னையை விட சிறிய அளவிலான புதுச்சேரியில் நாளொன்றுக்கு 1200 பேர் என்ற அளவில் தொற்று பாதிப்புக்குள்ளாவது அபாயகரமானது எனத் தெரிவித்தனர். புதுச்சேரியில் தடுப்பூசி, ரெம்டெசிவிர், வென்டிலேட்டர், படுக்கை ஆகியவற்றின் இருப்பு குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரியில் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மதுபானம் மற்றும் சிகரெட் விற்பனைக்குத் தடைவிதிக்கக் கோரிய வழக்கில், கரோனா பாதிப்பை இவை அதிகரிக்கும் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆய்வுகளோ அல்லது ஆதாரங்களோ இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு நாளை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி தொடர்பான தாமாக முன்வந்து (சூமோட்டோ) தொடுக்கப்பட்ட வழக்குகளுடன், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தக் கோரியும், தமிழகம் முழுவதும் சித்தா மற்றும் ஆயுர்வேதா கிளினிக்குகள் அமைக்கக் கோரியும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளைக் கவனிக்க உதவியாளர்களை அனுமதிக்கக் கூடாது எனக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையையும் நீதிபதிகள் நாளை தள்ளிவைத்துள்ளனர்.