மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகில் நூற்றாண்டுகள் பழமையான வணிகக் கட்டிடம் ஒரு பக்கம் இடிந்து விழுந்தது. ஆபத்தான நிலையில் கட்டிடம் தொடர்ந்து இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அம்மன் சன்னதி எதிரே உள்ள கீழவெளி பகுதியில் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு நூற்றாண்டுகள் பழமையான வணிகக் கட்டிடமும் சாலையின் ஓரத்தில் செயல்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக கட்டிடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டு, கட்டிடத்தின் சுவர் ஒரு பக்கம் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளது.
இதனால் அக்கட்டிடத்தில் உள்ள பழமையான உணவகம், பெட்டிக்கடை, பலசரக்குக் கடை, பலகாரக் கடை எனப் பல்வேறு கடைகள் அடுத்தடுத்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. இதன் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மதுரையில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் 1500க்கும் மேற்பட்ட பழமையான கட்டிடங்களுக்குத் தீயணைப்புத்துறை சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பழமையான கட்டிடங்களை வணிகம், கடை உள்ளிட்ட எந்தப் பயன்பாட்டுக்கும் உட்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், மதுரையில் நூற்றாண்டுகள் பழமையான வணிக வளாகமாகச் செயல்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.