தமிழகம்

ஸ்டெர்லைட் ஆலை, ஆக்சிஜன் உற்பத்தி, ரெம்டெசிவர் மருந்து இருப்பு: உயர் நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கும் என மத்திய அரசும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசும் நாளை விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தாக்கம் தீவிரம் அடைந்ததை அடுத்து ரெம்டெசிவிர் மருந்துப் பற்றாக்குறை, ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்புவது, தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் எனவும், ஜெர்மனி, ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரப்பெற்றுள்ள உதவிகளை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது தொடர்பான நடைமுறை குறித்தும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், அரசிடம் விளக்கம் பெற்று நாளை தெரிவிப்பதாகக் கூறினார். பின்னர், ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மே 9ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 500 ரெம்டெசிவிர் மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். பாதிப்பின் அடிப்படையில் எவ்விதப் பாகுபாடுமின்றி மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருந்தாலும், அதிகாரிகள் இருப்பதனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் தெரிவிக்க வேண்டும் எனக் கூறிய தலைமை நீதிபதி, இது தொடர்பாக சுகாதாரத்துறைச் செயலாளரிடம் விவரங்களைப் பெற்றோ அல்லது அவரே ஆஜராகியோ தெரிவிக்கும்படி தமிழக அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை ஒத்திவைத்துள்ளார்.

SCROLL FOR NEXT