பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் கண்காணிப்புக் குழு ஆய்வு; 7 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும்: ஆட்சியர் தகவல்

ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

இன்னும் 7 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. தினமும் லட்சக்கணக்கானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் இருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 27-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளித்து தமிழக அரசு சார்பில் கடந்த 29-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கண்காணிப்புக் குழுவும் அமைத்து அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, தேவையான அனுமதிகளை வழங்கினர். மேலும், தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக ஆய்வுகளை நடத்தினர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இன்று (மே 05) நேரில் ஆய்வு செய்தனர். இந்தக் குழுவில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்டச் சுற்றுச்சூழல் நலப்பொறியாளர் சத்தியராஜ், தூத்துக்குடி அனல்மின் நிலைய முதன்மை துணை வேதியியலாளர் ஜோசப் பெல்லார்மின் அண்டன் சோரீஸ், சுற்றுச்சூழல் வல்லூநர்கள் கனகவேல், அமர்நாத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

குழுவினர் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் முழுமையாக ஆய்வு நடத்தினர். ஆக்சிஜன் உற்பத்திக்குத் தேவையான மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு, ஆலையில் உள்ள மோட்டார்கள், கருவிகளை இயக்கி பரிசோதனை செய்யப்படும். அதன் பிறகு மீண்டும் பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்பட்டு, மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். இன்னும் 7 நாட்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கிறோம் என, ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT