அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில், தமிழகத்தில் உள்ள புத்தகக் கடைகளையும் சேர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பதிப்புத் துறை மற்றும் புத்தக விற்பனைத் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் வேலாயுதம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''நூல் பதிப்பு மற்றும் நூல் விற்பனைத் துறையில், 40 வருடங்கள் கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், தற்போது தமிழ் நூல் பதிப்புத்துறை மற்றும் நூல் விற்பனைத் துறையின் பிரச்சினைகளைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
தமிழ்நாட்டில், நூல் பதிப்புத்துறை மற்றும் நூலகத்துறை மலர்ச்சியும், மறுமலர்ச்சியும் கண்டது கருணாநிதியின் ஆட்சிக் காலங்களில்தான். கருணாநிதி காலம், நூல் பதிப்புத்துறைக்கும், நூலகத் துறைக்கும் ஒரு பொற்காலம். ஆசியாவின் பிரம்மாண்ட அண்ணா நூற்றாண்டு நூலகமே அதற்கு சாட்சி.
தமிழ்நாட்டில் பேருந்து நிலையப் பகுதிகளில், மிகக் குறைந்த வாடகையில், நூல் விற்பனை நிலையங்களை நடத்துவதற்கு, அவர் ஆட்சிக் காலத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டது. அரசு நூலகங்களில், ஆயிரம் பிரதிகள் நூல்கள் வாங்கிக்கொள்ள அனுமதி அளித்து, நூலகம்தோறும் அறிவுக் கதவுகளைத் திறந்துவிட்டது அவரின் ஆட்சிக் காலம்தான்.
பதிப்புத் துறைக்கும், நூலகத் துறைக்கும் இத்தனை நன்மைகள் செய்த, திமுக ஆட்சியின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள்:
சமீபத்தில், கரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களாக நின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் போன்று, நாட்டு நடப்பை அறிந்துகொள்ள, இரவு பகல் பாராது உழைக்கும் பத்திரிகைகள், மீடியாக்களில் பணிபுரிபவர்களும் முன்களப் பணியாளர்கள் என்று அறிவித்து கவுரவித்துள்ளீர்கள். பத்திரிகை, ஊடக உலகம் சார்பில் அதற்கு ஒரு பதிப்பாளராக நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பதிப்புத் துறையும், நூல் விற்பனைத்துறையும் அதேபோன்றதொரு பணியில்தான் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள் என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
ஆகவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குக் கட்டுப்பாடுகளில், அத்தியாவசியப் பொருட்களான மளிகை, காய்கறி, பழங்கள், மருந்தகங்கள் போன்ற கடைகள் மட்டும் பகல் 12 மணி வரை இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில், தமிழகத்தில் உள்ள புத்தகக் கடைகளையும் சேர்க்க வேண்டும். ஊரடங்கு நாட்களில், பொதுமக்கள், வாசகர்கள், புத்தகங்கள் வாங்கிக் கொள்ள தினமும் அரை நாள் திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டுகிறோம்.
இந்த கரோனா பரவல் காலகட்டத்தில், துன்பங்களை அனுபவித்து வரும் மக்கள் அனைவருக்கும், புத்தக வாசிப்பு ஒன்றே மனதில் தன்னம்பிக்கையையும், புத்துணர்வையும் விதைக்கும் என்பது தாங்கள் அறிந்ததே. மேலும், புத்தகக் கடைகளில் எப்போதும் மக்கள் கூட்டம் இருப்பதில்லை. ஆகவே, தமிழ்நாடு அரசின் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து, புத்தக விற்பனை நிலையங்களை, ஊரடங்கு காலங்களில் திறந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டுகிறோம்.
மேலும் 2019-2020 ஆண்டிற்கான நூலக ஆணை, பல பதிப்பாளர்களுக்குக் கிடைத்தது. சில பதிப்பாளர்களுக்கு நூலக ஆணை வரவில்லை. தங்களின் தலைமையிலான ஆட்சியில், அனைத்துப் பதிப்பாளர்களுக்கும், பாரபட்சமின்றி நூலக ஆணை வழங்க வகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் பதிப்பாளர் நல வாரியம் தொடங்கப்பட்டது. அதன்மூலம், பதிப்பாளர் குடும்பங்களில் உள்ள உறுப்பினர்களுக்குப் பிரசவ நிதியுதவி, கல்வி நிதியுதவி வழங்குவதற்குத் திட்டம் உருவாக்கப்பட்டது. அரசு நூலகங்களுக்கு சப்ளை செய்யும் பதிப்பாளர்களின் நிதியில் இருந்து 2.5 சதவீதம் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, பதிப்பாளர் நலவாரியத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. அவை பயன்படுத்தப்படாமல் உள்ளது.
கரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, வேலை இழப்பால், கடந்த ஒரு வருடமாகத் தமிழ்நாட்டில் புத்தக விற்பனையின்றி, தமிழ் பதிப்புத் துறை மிகுந்த நட்டத்தில் இயங்கி வருகிறது. பதிப்பாளர் நலவாரியத்தில் இருக்கும் நிதியை, சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களுக்கு வட்டியில்லாக் கடனாக தற்போது வழங்கி உதவினால், அவர்கள் மீண்டும் புத்துணர்வு பெறுவதற்கு உதவியாக இருக்கும். இந்தக் கோரிக்கைகளை முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கும் ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் வேலாயுதம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.