தமிழகம்

ஆட்சிக்கு வரும் முன்னரே திமுகவுக்குச் சாதகமாகச் செயல்படும் காவல்துறை: எல்.முருகன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் காவல்துறை ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன்னரே திமுகவுக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருவதாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''அம்மா உணவகம் தாக்கப்பட்டு இருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அம்மா உணவகத்தைத் தாக்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்கள் மீது சாதாரணப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அம்மா உணவகம் என்பது பொதுச் சொத்து. பொதுச் சொத்தைச் சேதப்படுத்திய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.

இன்னும் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன்னரே தமிழ்நாடு காவல்துறை திமுகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. இது வருத்தம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மேல் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று எல்.முருகன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT