உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகம்: கோப்புப்படம் 
தமிழகம்

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கச் செய்யும் மதுபானங்கள் விற்பனையை தொடர்வது ஏன்? - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

கி.மகாராஜன்

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கச் செய்யும் மதுபானங்கள் விற்பனையை தொடர்வது ஏன் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் கரோனா 2-ம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், கோயில்கள் மூடப்பட்டுள்ளன. கூட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுபான கடைகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

மதுக்கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால், கரோனா பரவல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று (மே 05) விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கச் செய்யும் மதுபானங்கள் விற்கப்படுவதை அனுமதிப்பது ஏன் என, கேள்வி எழுப்பினர். பின்னர், மனு தொடர்பாக மத்திய, மாநில உள்துறை செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT