எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்வார்கள் என, முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6 அன்று நடைபெற்றது. மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி 159 இடங்களைப் பெற்றது. திமுக 125 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சின்னத்தில் நின்றவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதன் மூலம் கூட்டு எண்ணிக்கை 133 ஆக உள்ளது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதியானது.
இந்நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று (மே 04) நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற மதிமுக கட்சியினர் 4 பேர், மனிதநேய மக்கள் கட்சியினர் இருவர், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தவாக தலைவர் வேல்முருகன் ஆகிய 8 பேர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், முதல்வராகத் தேர்வு செய்யப்பட தகுதியான திமுக சட்டப்பேரவை தலைவராக ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.
இதனிடையே, 75 தொகுதிகளை பெற்று அதிமுக எதிர்க்கட்சியாக இருக்கிறது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவராக யார் இருப்பார் என கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக, இன்று (மே 05) சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் பா.வளர்மதி, "அரசியல் கட்சிகளுக்கு வெற்றி-தோல்வி என்பது எப்போதும் சகஜம். தோல்வியை சந்திக்கும் மன உறுதியுடன் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
இதனை பின்னடைவாக எடுகவில்லை. மக்களின் விருப்பத்தை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும். எம்எல்ஏக்கள்தான் முடிவு செய்வார்கள். எங்களுக்குத் தனிப்பட்ட விருப்பமெல்லாம் கிடையாது. கட்சியின் விருப்பத்தைத்தான் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்" என தெரிவித்தார்.