டெல்லிக்கு எந்த வகையிலாவது 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வழங்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
டெல்லியில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அசுர வேகத்தில் உயர்ந்து வரும் வேளையில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடிக்கிறது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறை மே 3-ம் தேதி இரவுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 30-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் ஆக்சிஜன் நெருக்கடி தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் விபின் சாங்கி, ரேகா பாலி ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “டெல்லிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவுக்கு ஆக்சிஜன் வந்துசேரவில்லை என்பது எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. டெல்லிக்கு 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்ய உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் 490 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே வருகிறது. டெல்லிக்கு முழு ஒதுக்கீடு ஆக்சிஜனும் எந்த வகையிலாவது வழங்கப்பட வேண்டும். மேலும்இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றத் தவறியதற்காக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், “தீக்கோழியை போல நீங்கள் உங்கள் தலையை மணலில் புதைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் எங்களால் அது முடியாது. நீங்கள் என்ன தந்த கோபுரத்தில் வசிக்கிறீர்களா? வெள்ளம் தலைக்கு மேல் செல்கிறது. தேவையான அனைத்தையும் நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். நாங்கள்வெறுமனே கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது. உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதை தவிர வேறு எந்த விளக்கத்தையும் நாங்கள் கேட்க முடியாது” என்றும் நீதிபதிகள் சாடினர்.