இரண்டு மாதங்களாக தொடர்ந்து தக்காளி குறைந்த விலைக்கு விற்பனையாவதால் தக்காளி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாத இறுதி வாரம் தொடங்கி தற்போது வரை தக்காளிக்கு கட்டுப்படி ஆகும் விலை கிடைக்கவில்லை. எனவே, தக்காளி விவசாயிகள் மிக வேதனை அடைந்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு மேலாக மிகக் குறைந்த விலையில் தக்காளி விற்பனையாவதால் பல இடங்களில் அறுவடை செய்யப்பட்ட தக்காளியை சாலையோரங்களிலும், ஏரி, குளம் போன்ற இடங்களிலும் விவசாயிகள் பலர் கொட்டிச் செல்லும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி முதல் தற்போது வரை உழவர் சந்தைகளிலும் கூட தக்காளிக்கு மிகக் குறைந்த விலையே கிடைக்கிறது. ஒவ்வொரு நாள் ஒரு விலை என்றாலும் கூட கிலோவுக்கு அதிகபட்சமாக ரூ.10-ஐ கடந்து விடாத வகையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல, பல நாட்களில் கிலோவுக்கு ரூ.4 அல்லது ரூ.5 எனவும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தொப்பூர் பகுதியைச் சேர்ந்த தக்காளி விவசாயி செல்வம் கூறியது:
ஓரிரு வாரங்கள் விலை குறைவதும், அடுத்து வரும் சில வாரங்களில் விலைசற்றே உயர்வதுமாக இருந்தால் கூட ஓரளவு லாபம் ஈட்ட முடியும். 2 மாதங்களுக்கும் மேலாக தக்காளிக்கு மிகக் குறைந்த விலை நீடிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான சிரமங்களை தொடர்ந்து விவசாயிகள் எதிர்கொள்கிறோம். குறிப்பாக தக்காளி, கத்தரி, வெண்டை,முள்ளங்கி, சுரை போன்ற பயிர் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாகிறோம். இவற்றிலும் தக்காளி விவசாயிகளின் வேதனைகள் மிக அவலம் நிறைந்தது. இதற்கெல்லாம் அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
விவசாயிகளின் விளைபொருட் களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து, அந்த விலை சிதறாமல் விவசாயிகளின் கைகளை சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், நிலையில்லா விலை கொண்ட சாகுபடி பயிர்களை நடவு செய்யும் விவசாயிகள் அவற்றை கைவிடும் நிலை உருவாகும். அப்போது, அத்தியாவசிய பொருட்களான இவற்றின் விலை உச்சத்துக்கு சென்று நுகர்வோரையும் வேதனைக்குள் தள்ளிவிடும்.
இவ்வாறு கூறினார்.