அம்பத்தூர் பகுதியில் உயர் அழுத்த மின் இணைப்பை புதுப்பிக்கவும், மின்தூக்கி இயக்கத்துக்கான அனுமதி வழங்கவும் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் ஆய்வாளருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அம்பத்தூர் பகுதியை சேர்ந்த சுப்பையா, கடந்த 2017-ம்ஆண்டு தனக்கு சொந்தமான வணிகவளாகத்துக்கு வழங்கப்பட்ட உயர்அழுத்த மின் இணைப்பை புதுப்பிக்கவும் மின்தூக்கி இயக்கத்துக்கான அனுமதி வழங்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் விண்ணப்பித்தார்.
இவற்றை வழங்க, அப்போது அம்பத்தூர் கோட்ட மின் ஆய்வாளராக பணிபுரிந்த தேனப்பன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பையா, மின் ஆய்வாளர் தேனப்பன் மீது சென்னை, ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் ஆலோசனையின்படி, கடந்த 2017 அக். 9-ம் தேதி மின் ஆய்வாளர் தேனப்பனிடம் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.10 ஆயிரத்தை சுப்பையா அளித்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் லஞ்சம் வாங்கிய தேனப்பனைகையும் களவுமாக பிடித்து கைதுசெய்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
அந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் திருவள்ளூர் மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் - சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில், அரசு தரப்பில் வழக்கறிஞர் வி.அமுதா வாதிட்டார். முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், தேனப்பன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
இதனையடுத்து, நேற்று மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் இரா.வேலரஸ் தீர்ப்பு அளித்தார். அத்தீர்ப்பில், ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக தேனப்பனுக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார்.