சென்னையில் அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் கரையோரத்திலிருந்து அகற்றப்பட்டு வரும் குடிசைப்பகுதி வாசிகளுக்கு அருகிலேயே வீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னையில் பெய்த கன மழையால் அடையாற்றின் கரையோரத்தில் உள்ள ஏராளமான வீடுகள் பாதிக்கப்பட்டன. அங்கு வசித்த பொதுமக்களுக்கு அரசு தரப்பில் கட்டப்பட்டுள்ள 10 ஆயிரம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது வரவேற்கத்தக்க ஒன்றுதான். ஆனால், அடையாறு மற்றும் கூவம் ஆற்றின் ஓரத்தில் வாழ்ந்த பொதுமக்கள் பலர், சென்னை மாநகருக்குள் சிறு வணிகம் மற்றும் கூலித் தொழில் செய்தே பிழைப்பு நடத்தி வந்தனர்.
அவர்களுக்கு இப்போது ஒக்கியம் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் பகுதிகளில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் தினமும் சென்னை மாநகருக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மாநகர எல்லைக்குள்ளேயே அவர்களுக்கு வீடுகளை வழங்க வேண்டும்.
அடையாற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது. ஏழைகளின் குடிசைகளை அகற்றும் அரசிடம், ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வணிக நிறுவனங்கள், மாளிகைகள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றை அகற்ற என்ன திட்டம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், “நீர்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசு, அங்கு குடியிருந்த மக்களுக்கு அருகிலேயே வீடுகளை வழங்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் வெளிப்படைத்தன்மை அவசியம். மேலும், குடிசை பகுதிகளை அகற்றுவதில் ஆர்வம் காட்டும் அரசு, நீர்வழித் தடங்களை ஆக்கிரமித்துள்ள கார்ப்பரேட் பெரு நிறுவனங்களையும் அகற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.