“மின் இணைப்பு வழங்கியதும் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும்” என, ஸ்டெர்லைட் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்படுவதால், ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை மட்டும் இயக்க உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதி அளித்தது.
இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி அளித்தும், கண்காணிப்புக் குழு அமைத்தும் தமிழக அரசு கடந்த 29-ம் தேதி அரசாணை வெளியிட்டது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்து, தேவையான அனுமதிகளை வழங்கினர். தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பிலும் ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால், இதுவரை ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஸ்டெர்லைட் நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் தேவையான அனைத்து முன் இயக்க சோதனைகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. மின் இணைப்பு கொடுக்கப்பட்டதும் உடனடியாக ஆக்சிஜன் உற்பத்திக்கான பணிகளைத் தொடங்க தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.