தமிழகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தமிழக அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார்?

ரெ.ஜாய்சன்

தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இடம்பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில்அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ள திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7-ம் தேதி தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார்.

அவருடன் சேர்ந்து அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். ஆனால், யார், யார் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர் என்ற விவரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மூத்த தலைவர்கள், இளைஞர்கள், பெண்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் மற்றும் பெரும்பான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலும், அனைத்து மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையிலும் அமைச்சரவையை அமைக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இம்மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெறலாம் என, திமுக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

கீதாஜீவன்

கீதாஜீவனை பொறுத்தவரை தூத்துக்குடி தொகுதியில் மூன்றாவது முறையாக வென்றுள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் முரட்டு பக்தர் என புகழப்பட்ட முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியின் மகளாவார். மேலும், மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் அன்பை பெற்றவர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தின் திமுக பொறுப்பாளராக இருந்து வருகிறார். மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக வென்றபோதிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (50,310) வென்றவர்.

கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார். பெண், கிறிஸ்தவர் மற்றும் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என மூன்றுநிலைகளில் அவருக்கு அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் உறுதியோடு நம்புகின்றனர்.

அனிதா ராதாகிருஷ்ணன்

அனிதா ராதாகிருஷ்ணனை பொறுத்தவரை திருச்செந்தூர் தொகுதியில் தொடர்ந்து 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2019 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் கடுமையாக பணியாற்றி ஓட்டப்பிடாரம் தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு திமுகவை வெற்றிபெறச் செய்தார். மேலும், நடந்துமுடிந்துள்ள தேர்தலில் தனது மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச்செய்துள்ளார்.

கட்சி தலைமைக்கு மிகவும் விசுவாசமாக இருந்து வருகிறார். தென் மாவட்டங்களில் உள்ள திமுக முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார். கடந்த 2002 முதல் 2006 வரை அதிமுக அமைச்சரவையில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். எனவே, அமைச்சரவையில் நிச்சயம் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இடம் பெறுவார் என, அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.

இவர்களில் ஒருவர் அமைச்சராவாரா? அல்லது இரண்டு பேருமே அமைச்சர் ஆவார்களா என்பது இன்னும் 2 நாட்களில் தெரியவந்துவிடும்.

SCROLL FOR NEXT