சுதந்திரப் போராட்ட வீரரும், மகாத்மா காந்தியின் தனிச் செயலராக இருந்தவருமான வி.கல்யாணம் இன்று பிற்பகலில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 99.
1920ஆம் ஆண்டு பிறந்தவர் வெங்கிட்ட கல்யாணம் என்கிற வி.கல்யாணம். தன் 22-வது வயதில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடந்துகொண்டிருந்த வேளையில் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார். காந்தியுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அவரது தனிச் செயலாளராக 5 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
காந்தியின் மறைவுக்குப் பிறகு எந்த அரசியல் தலைவருடனும் அவர் இணைந்து பயணிப்பதைத் தவிர்த்தார். காந்தியிடம் பணியாற்றிய வாய்ப்பைப் பெரிய வரமாகக் கருதியதாகவும், அவர் நம்மை விட்டுப் பிரிந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், அவருக்குத் தொண்டு செய்த நாட்களின் நினைவுகளே தன்னைத் தொடர்ந்து இயக்குவதாகவும் பேட்டிகளில் கல்யாணம் குறிப்பிட்டுள்ளார்.
காந்தியை வழிபடுவது, கொண்டாடுவது, விழா எடுப்பதைக் காட்டிலும் அவர் காட்டிய வழியைப் பின்பற்றுவதே உண்மையான காந்தியப் பற்று என்பதே கல்யாணத்தின் கருத்து.
கடைசிவரை மகாத்மா காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். 99 வயதிலும் தன் வேலைகளைத் தானே செய்து வந்த வி.கல்யாணம் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
அவரது இறுதிச்சடங்கு நாளை சென்னை, பெசன்ட் நகர் மின்மயானத்தில் மதியம் 1.30 மணி அளவில் நடைபெற உள்ளது.