இன்று நடந்த திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக சட்டப்பேரவைத் தலைவராக ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். தனது ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கடிதத்துடன் நாளை காலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6 அன்று நடந்தது. மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் திமுக கூட்டணி 159 இடங்களைப் பெற்றது. திமுக 125 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சின்னத்தில் நின்றவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதன் மூலம் கூட்டு எண்ணிக்கை 133 ஆக உள்ளது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதியானது.
தேர்தலில் வெற்றி பெற்றதும் பேட்டி அளித்த திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வராகப் பதவி ஏற்க உள்ள நிகழ்ச்சி எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் நடக்கும் எனத் தெரிவித்தார். ஆட்சி அமைக்க உரிமை கோரும் முன் முதலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி சின்னத்தில் வென்றவர்கள் கூட்டத்தைக் கூட்டி அவர்கள் ஆதரவை ஸ்டாலின் பெற வேண்டும் என்பதால், அதற்கான கூட்டம் இன்று மாலை ஏற்கெனவே அறிவித்தபடி நடந்தது.
அதன்படி இன்று மாலை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற மதிமுக கட்சியினர் 4 பேர், மனிதநேய மக்கள் கட்சியினர் இருவர், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தவாக தலைவர் வேல்முருகன் ஆகிய 8 பேர் கலந்துகொண்டனர்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்க, கூட்டம் ஆரம்பமானது. கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் திமுக சட்டப்பேரவைத் தலைவராக ஸ்டாலின் பெயரை முன்மொழிய, பொருளாளர் கே.என்.நேரு வழிமொழிய அனைத்து உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக கரவொலி எழுப்பி அதை அங்கீகரித்தனர்.
இதன் மூலம் முதல்வராகத் தேர்வு செய்யப்பட தகுதியான திமுக சட்டப்பேரவை தலைவராக ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார். 133 பேரின் ஆதரவுக் கடிதத்துடன் ஆட்சி அமைக்கக் கோரும் கடிதம், அமைச்சர்கள் பட்டியலுடன் நாளை மாலை 6 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அப்போது ஆட்சி அமைக்க உரிமை கோருவார். பின்னர் முறைப்படி ஆளுநர் அழைப்பு விடுப்பார். அதன்படி வரும் மே 7 என ஏற்கெனவே திட்டமிட்டபடி அன்று காலை ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்கிறார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார். இதன் பின்னர் அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவி ஏற்பார்கள்.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்டவற்றை இன்று தலைமைச் செயலர், ஆளுநரின் செயலர், சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் நடத்தினர். கரோனா பரவல் காரணமாக எளிய முறையில் பதவி ஏற்பு விழா நடக்கிறது. 200 பேர் மட்டுமே அழைக்கப்பட உள்ளனர்.
இன்று சட்டப்பேரவை திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட கூட்டம் முடிந்தவுடன், முன்னாள் பொருளாளரும் வடசென்னை எம்.பி. டாக்டர் கலாநிதியின் தந்தையுமான ஆற்காடு வீராசாமி இல்லத்திற்கு ஆசி பெறப் புறப்பட்டுச் சென்றார். பின்னர் அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.