திமுக தலைவர் ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து அவர் முதல்வராகத் தேர்வு செய்யப்படுவதற்காகத் தனது வாழ்த்தைத் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இல்லாத நிலையில் தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்ப கட்சி ஆரம்பிப்பதாக ரஜினி அறிவித்திருந்த நிலையில் திடீரென கமல் கட்சி ஆரம்பித்தார். மக்கள் நீதி மய்யம் எனப் பெயரிட்ட கட்சியில் திரைத்துறையினர், ஓய்வு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இணைந்தனர்.
கமல் கட்சி ஆரம்பித்தாலும் மக்கள் நீதி மய்யத்தை ஒரு கட்சியாக திமுக அங்கீகரிக்கவில்லை. திமுக கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தை அழைக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட்டது. அதில் பெரிய அளவில் வாக்குகளைப் பெறவில்லை. அதன் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கழகங்களுடன் கூட்டணி இல்லை என்று கமல் அறிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி கமல் தீவிரப் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் கமல் அதிகம் விமர்சித்தார். அதிலும் திமுக மீதான விமர்சனம் அதிகம் இருந்தது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் மநீம தலைவர் உட்பட அனைவரும் தோல்வியைத் தழுவினர். திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தலைவர் முதல்வராகத் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உருவானது.
இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். “பெருவெற்றி பெற்றுள்ள ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான பாராட்டுகள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாகச் செயல்பட்டுத் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல என் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டிருந்தார்.
அதற்கு பதிலுக்கு நன்றி சொன்ன ஸ்டாலின், “அன்பு நண்பரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி! பேரிடரிலிருந்து மக்களைக் காக்க வேண்டிய பெரும் பணியில் தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆலோசனைகளும் புதிய அரசு மேற்கொள்ளும் மக்கள் நலப் பணிக்குத் துணையாகட்டும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலினிடம் கமல் நேரில் சந்தித்து வாழ்த்து கூற வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்டத்துக்குக் கிளம்புவதைச் சற்று நேரம் ஒத்திவைத்து கமல் வருகைக்காக ஸ்டாலின் காத்திருந்தார். கமல் வந்தவுடன் அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
கமல்ஹாசனை ஸ்டாலின் வரவேற்றார். அவருக்கு கமல் வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருடன் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார். பின்னர் கமல்ஹாசன் கிளம்பினார். அவரை வாசல்வரை வந்து உதயநிதி ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்.