தமிழகம்

கரோனா பெருந்தொற்று: அரசின் முன் உள்ள சவால்கள்; செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன?

கார்த்திக் கிருஷ்ணா

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் தேவை உருவாகியுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பக்கம் கரோனா தொற்று எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் இருக்கும் மருத்துவமனை படுக்கைகளுக்கும், பொதுவாக கரோனா தீவிரமடையும் நோயாளிகளுக்கான படுக்கைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதுள்ள தினசரி 20,000 என்கிற தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 25,000-ஐத் தொடும்போது நிலைமையைக் கட்டுப்படுத்துவது பெரும் சிக்கலாகிவிடும் என்று மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இன்னொரு பக்கம் அரசாங்கம் இதற்காக ஏற்கெனவே ரூ.15 ஆயிரம் கோடி அளவு செலவழித்துள்ளதாகவும், மேலும் செலவழிக்கத் தேவையான நிதியில் சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிகிறது. இப்போதைக்கு சென்னை வர்த்தக மையம், கல்லூரிகள், தனியார் ஓட்டல்கள் எனப் பல இடங்கள் கோவிட் மையமாக தற்காலிக மாற்றம் கண்டுள்ளன. ஆனால் இவற்றில் பெரும்பாலும் ஆக்சிஜன் படுக்கைகள் கிடையாது.

இப்படியான ஒரு சூழலில் களத்தில் இருக்கும் மருத்துவர்களின் குரல் உயர் நிலை மருத்துவர்களுக்குச் சரியாகச் சென்று சேர்வதில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத அரசு மருத்துவர் ஒருவர் வேதனைப்பட்டார்.

மே 7-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு ஆட்சியில் அமர உள்ள நிலையில், அரசின் முன் இருக்கும் சவால்கள் என்னென்ன, செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பது குறித்தும், இந்த நெருக்கடி நிலையை எப்படிச் சமாளிக்கலாம் என்பது குறித்தும் சில மூத்த மருத்துவர்களிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பாகப் பேசினோம்.

அவர்கள் கூறிய வார்த்தைகள் இதோ ஆலோசனைகளாக...

# வெறும் புள்ளி விவரங்களை மட்டுமே நம்பாமல் களத்தில் இறங்கி நிலவரம் தெரிந்து, தொலைநோக்கோடு வேலை செய்ய வேண்டும்.

# கரோனா கண்டறியப்பட்டு அரசின் பரிசோதனை மையத்துக்கு வரும் நோயாளிகளுக்கு இப்போது ஆக்சிஜன் அளவு 95 மற்றும் அதை விட அதிகமாக இருந்தால் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதில்லை. வீட்டுத் தனிமையில் இருக்க வைக்கப்படுகிறார்கள். இந்த முறையோடு சேர்த்து ரத்தப் பரிசோதனையையும் வைத்தே கரோனாவின் அளவைத் தீர்மானிக்க வெண்டும். நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சையிடம் மருத்துவமனையா, வீடா, மையமா என்பதைத் தகுதி வாய்ந்த மருத்துவர்கள் முடிவு செய்ய வேண்டும்.

# முழுமையாக மையக் கட்டுப்பாட்டு அறை ஒன்றை உருவாக்க வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கும் மருத்துவமனைகளில் எவ்வளவு பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த நிகழ்நேரத் தகவல்கள் தரப்பட வேண்டும். இந்த அறையிலிருந்து தமிழகத்தில் இருக்கும் அத்தனை ஆம்புலன்ஸ்களுக்கும், பொது மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் தொடர்பு இருக்க வேண்டும்.

# ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தும் மென்பொருளைப் போல ஒரு மென்பொருளைக் கொண்டு, ஆம்புலன்ஸின் நகர்வைக் கண்காணிக்கலாம். அதேபோல திரையரங்க டிக்கெட் முன்பதிவில் எந்தெந்த இருக்கைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்கள் தெரிவதைப் போல எந்தெந்த மருத்துவமனையில் எவ்வளவு படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறித்த நிகழ்நேரத் தகவல்கள் வந்து சேர வேண்டும். இப்படியான ஒரு அமைப்பு பதற்றத்தை, அவசர நிலையைக் குறைக்கும்.

# தேர்தல் முடிவு நேரத்தில் 234 தொகுதிகளின் நிலவரங்கள், நேரலையில் தொலைக்காட்சியில், இணையத்தில் தரப்படுகின்றன. மாவட்டத்தில் அரசு, தனியார் என ஏறத்தாழ 50 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இருக்கின்றன. இவற்றில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் நிகழ்நேரத் தகவலை இணையதளம் வாயிலாகத் தர வேண்டும்.

# சென்னை முழுவதும் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், கரோனா சிகிச்சைக்கெனப் புதிதாக 2000 தீவிர சிகிச்சைப் படுக்கைகளை பொது மக்களின் பயன்பாட்டுக்காக அரசு ஏற்று நடத்தலாம். ஆனால் தனியார் மருத்துவமனை நிர்வாகங்களின் தரப்பில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தரத் அவர்களின் மருத்துவர்கள் தயங்குவதாகவும், எனவே மருத்துவர்களை அராசங்கம் அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது. மேலும் கூடுதல் ஆக்சிஜன் வசதியையும் அரசே ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைகள் கேட்கின்றன. இந்த சிக்கலைத் தீர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

# தற்காலிக கோவிட் மையங்களிலும், போர்க்கால அடிப்படையில் பிரத்யேக ஆக்சிஜன் வசதி செய்து தரப்பட வேண்டும். இவற்றைப் பொதுப்பணித்துறை ஊழியர்களை வைத்துச் செய்யாமல், இதற்கான நிபுணத்துவம் பெற்றிருக்கும் பொறியாளர்ளின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையுடன் நிறுவப்பட வேண்டும். சரியாக ஆக்சிஜன் வசதி செய்யப்படவில்லையென்றால், அடிக்கடி வட இந்தியாவில் நடப்பது போன்ற தீ விபத்துகள் நடக்கலாம்.

# தடுப்பூசி மையங்களை அரசு பொது மருத்துவமனைகளில் இருந்து அரசு பள்ளிக்கூடங்களுக்கு மாற்றுவதும், அங்கு தனிமனித இடைவெளி உள்ளிட்ட அடிப்படை விதிகளைக் கடைப்பிடிப்பதும் நோய்ப்பரவலைக் கட்டுபடுத்தும்.

# கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் இரு வழிகளைக் கையாள வேண்டும். நோய் பரவாமல் தடுத்தல், நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களைக் காப்பாற்றுதல்.

சந்தேகத்தின் பேரிலோ, அறிகுறிகளாலோ ஒருவர் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துகொண்டால் அதன் முடிவுகளை 10-12 மணி நேரத்துக்குள் தெரிந்துகொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டும். தற்போது பரிசோதனை முடிவுகள் வர கிட்டத்தட்ட 2 நாட்கள் ஆகிவிடுகின்றன. இதுவே தொற்றுப் பரவல் சங்கிலியை அறுக்க முடியாத சூழலை உருவாக்குகிறது.

10-12 மணி நேரத்துக்குள் முடிவு தெரிந்துவிட்டால் ஒருவேளை தொற்று இருப்பது உறுதியானால் உடனடியாக அவர் குணமாகும் வரை, சிகிச்சை முடியும்வரை தொடர் கண்காணிப்பில் இருப்பது அவசியம். அதன் மூலம் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும்.

# முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்களில் எத்தனை பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட்டவர்களில் எத்தனை பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர், நோயின் தன்மை என்ன, இணை நோய்கள் இல்லாத எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது குறித்த முழுமையான தரவுகள் அரசிடம் இருக்க வேண்டும். இதுவே சிகிச்சை தருவதற்குப் பெரிய அளவில் பயன்படும்.

இப்படிப் பல யோசனைகளை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர்.

இவற்றைத் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கவனத்துடன் ஆய்வு செய்து, போர்க்கால அடைப்படையில் மக்களைக் காப்பாற்ற வேண்டும். ஒரே நேரத்தில் அதிகப்படியான பயமும் அலட்சியமும் நிறைந்த இந்தச் சூழலில் அரசின் நடவடிக்கைகள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்.

SCROLL FOR NEXT