தஞ்சாவூர் மருத்துவமனைகளில் தேவையான அளவு ஆக்சிஜன் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளரிடம் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கூறியதாவது:
’’தஞ்சாவூர் மாவட்டத்தில், கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தச் சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம், அரசு வழிகாட்டுதலின்படி, நமது மாவட்டத்தில் 13 தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இப்பொழுது 20 தனியார் மருத்துவமனைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை, தேவை அடிப்படையில் யாருக்கு மருத்துவ வசதி தேவைப்படுகிறதோ, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் கரோனா தொற்றாளர்களுக்குத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் வசதி கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதிப்படுத்தி வருகின்றோம்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலா 10 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட டேங்க், அதாவது 20 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் உள்ளது. அதனால் நமக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் சிலிண்டர் கையிருப்பில் உள்ளது.
அதேபோல் ஒவ்வொரு நாளும் சுகாதாரத்துறை இணை இயக்குனர், துணை இயக்குனர், மருத்துவக் கல்லூரி முதல்வர், தனியார் மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் கலந்து ஆலோசித்து, ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத அளவுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.
அதேபோல் தேவை அடிப்படையில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை தற்போது 4,500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது 2,191 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது 50 சதவீதத்திற்கும் மேலான படுக்கைகள் காலியாக உள்ளன.
தினசரி 200, 300, 400 என்ற அளவில் தொற்று அதிகரித்து வருகிறது. வரும் மே மாதத்தில் தேசிய அளவில் அதிக அளவிலான கரோனா தொற்று ஏற்படக்கூடும் எனப் பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. அந்த வகையில் நமது மாவட்டத்தில் வரக்கூடிய நோயாளிகளுக்குத் தேவையான அடிப்படையில், உரிய படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை உயர்த்தி நோயாளிகளுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படும். அதேபோல் உரிய சிகிச்சை அளிக்கவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அரசு தற்போது கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனைப் பொதுமக்கள் புரிந்துகொண்டு அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியே வரவேண்டும். அப்படி வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்ற சுய விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். தற்போதுள்ள சூழ்நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எனவே அதனைப் பொதுமக்கள் நல்ல முறையில் புரிந்துகொண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ரெம்டெசிவிர் தடுப்பு மருந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு இருப்பு உள்ளது. தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரை அவர்களுடைய விநியோகஸ்தர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொண்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவைப்பட்டால், தேவையான அளவுக்கு ரெம்டெசிவிர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’.
இவ்வாறு ஆட்சியர் ம.கோவிந்தராவ் தெரிவித்தார்.
இந்த ஆய்வில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் எஸ்.மருததுரை, நிலைய மருத்துவ அலுவலர் ஏ.செல்வம், தஞ்சாவூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.