பாப்பநாயக்கன்பாளையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். 
தமிழகம்

கோவையில் தடுப்புகள் அமைத்து தெருவைத் தனிமைப்படுத்தியதால் மக்கள் சாலை மறியல்

பெ.சீனிவாசன்

கோவையில் கரோனா பாதித்த பகுதியை மாநகராட்சியினர் தனிமைப்படுத்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகேயுள்ள பெருமாள் கோயில் வீதியில் ஒரே வீட்டில் வசிக்கும் இருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பாதிப்புக்கு உள்ளான பகுதியில் தடுப்புகள் அமைத்து, தெருவைத் தனிமைப்படுத்தும் பணியில் மாநகராட்சியினர் இன்று ஈடுபட்டனர்.

மாநகராட்சியினரின் இத்தகைய நடவடிக்கையால், அப்பகுதியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிப்புக்கு உள்ளாவார்கள், வெளியில் சென்று வர முடியாது எனத் தெரிவித்து, பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் அப்பகுதியில் பிரதான சாலையை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ரேஸ்கோர்ஸ் போலீஸார், மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி, பொதுமக்கள் சென்று வரும் வகையில் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ''பொதுமக்கள் மத்தியில் நோய் அதிகம் பரவாமல், கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், மக்கள் இதனைப் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். நோயைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்றனர்.

SCROLL FOR NEXT