கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும். கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜிராம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் தற்போது 10 லட்சத்து 13 ஆயிரத்து 378 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 ஆயிரத்து 250 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற நாடுகள், தடுப்பூசி மருந்துகளை 90 சதவீத மக்களுக்கு இலவசமாக வழங்கும் நிலையில், இந்தியாவில் கரோனா தடுப்பூசிகளான கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள், மத்திய அரசுக்கு 150 ரூபாய்க்கும், மாநில அரசுகளுக்கு 400 ரூபாய்க்கும், பொதுமக்களுக்கு 600 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 135 கோடி மக்கள்தொகையில் 2 முதல் 5 சதவீதம் மக்களுக்கே இந்தத் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகின்றன.
கரோனா பரவலைத் தடுக்க, தமிழகத்தில் மேலும் 2 ஆயிரம் மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். செங்கல்பட்டில், 100 ஏக்கர் பரப்பில் மத்திய அரசால் 2012இல் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த தடுப்பூசி நிறுவனத்துக்கு ஏற்கெனவே 904 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தப்படாமல் உள்ளது. 58.5 கோடி டோஸ் தடுப்பூசி மருந்தைத் தயாரிக்கும் திறன் பெற்ற இந்த ஆலையில் உற்பத்தியைத் தொடங்க மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அறிவிக்க வேண்டும். கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். மாநிலத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்” என மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.