கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று 2ஆம் நாளாக மீண்டும் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் கரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்கிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. நேற்று தமிழக தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டி 21,000 நோக்கிச் செல்கிறது. சென்னையில் பாதிப்பு 6,150 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் 1618, கோவையில் 1566, திருவள்ளூரில் 1207, சேலத்தில் 607, திருச்சியில் 653, காஞ்சிபுரத்தில் 835, தூத்துக்குடியில் 707 எனப் பல மாவட்டங்களில் நேற்றைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 1 லட்சத்து 23 ஆயிரம் பேர் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். நாள்தோறும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். உயிரிழப்பு எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாளில் மட்டும் 122 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்கவில்லை. தனியார் மருத்துவமனைகளில் கூட படுக்கைகள் இல்லாமல் பொதுமக்கள் வாடி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை வாசல்களில் ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா பரவல் குறித்து நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
நேற்றிரவு இதையொட்டி ஊரடங்கில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலாவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ஊரடங்கை அமல்படுத்த அரசு யோசிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் மக்களுக்கு உரிய உதவித்தொகை அளித்து ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிக அளவில் தொற்றுப் பரவல் உள்ளதால் சில மாவட்டங்களில் ஊரடங்கை அமல்படுத்தலாம் எனச் சில நாட்களுக்கு முன் ஆலோசிக்கப்பட்டது. நேற்று ஸ்டாலினுடன் நடத்திய ஆலோசனையில் இதே கருத்தைத் தலைமைச் செயலரும், சுகாதாரத்துறைச் செயலரும் வைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், ஊரடங்கால் மக்கள் வாழ்வாதாரம் மேலும் பாதிக்கப்படும் என்பதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க ஸ்டாலின் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. நேற்றும் கரோனா தொற்று அதிகரித்ததும், தொடர்ந்து நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதாலும் இதுகுறித்து இன்று மீண்டும் ஆலோசனை நடத்த தலைமைச் செயலர், சுகாதாரத்துறை அதிகாரிகளை ஸ்டாலின் அழைத்ததை அடுத்து அனைவரும் ஸ்டாலின் இல்லத்தில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கரோனா பரவலின் தீவிரம் காரணமாகத் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்காவது ஊரடங்கை அமல்படுத்தலாமா, படுக்கைகள் வசதிகளை அதிகரிக்க என்ன செய்வது, ஆக்சிஜன் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனையில் பேசப்படும் எனத் தெரிகிறது.