தமிழகம்

ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல் தொகுதிகளை முதல்முறையாக கைப்பற்றிய திமுக

செய்திப்பிரிவு

ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல்ஆகிய 3 தொகுதிகளில் திமுக முதல்முறையாக வென்றுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், மாதவரம் ஆகிய 4 தொகுதிகள், 2011 சட்டப்பேரவைத் தேர்தலின்போது தொகுதி மறுசீரமைப்பில் உருவாக்கப்பட்டன. ஆவடி தொகுதியில் 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளரான அப்துல்ரஹீமை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட, காங்கிரஸ் வேட்பாளர் தாமோதரன் தோல்வியடைந்தார். 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் க.பாண்டியராஜனை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சா.மு.நாசர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அம்பத்தூர் தொகுதியில் 2011,2016 ஆகிய இரு தேர்தல்களிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ்.வேதாச்சலம், திமுக வேட்பாளர் பி.ரங்கநாதனை வென்றார். 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் வீ.அலெக்சாண்டர், காங்கிரஸ் வேட்பாளர் அசன்மவுலானாவை வென்றார்.

மதுரவாயல் தொகுதியில் 2011 தேர்தலில், அதிமுக கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளர் ஜி.பீம்ராவ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமகவேட்பாளர் செல்வம் தோல்வியடைந்தார். 2016 தேர்தலில் அதிமுக வேட்பாளர் பா.பெஞ்சமின், காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷை வென்றார்.

இந்நிலையில், 2021 தேர்தலில் ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல் ஆகிய 3 தொகுதிகளிலும் நேரடியாக களம்கண்ட திமுக, முதல்முறையாக 3 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

ஆவடி, மதுரவாயல் மற்றும் அம்பத்தூர் தொகுதிகளில் திமுகவை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்ட, அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், பா.பெஞ்சமின் மற்றும் அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ-வான வி.அலெக்சாண்டர் ஆகியோர் திமுக வேட்பாளர்களிடம் தோல்வியைத் தழுவினர்.

SCROLL FOR NEXT