லட்சுமணன் 
தமிழகம்

விழுப்புரம் தொகுதியை திமுக கைப்பற்றியது எவ்வாறு?

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திருக்கோவிலூர் ஆகிய 4 தொகுதிகளை திமுக கைப்பற்றிஉள்ளது. சட்டத்துறை அமைச்சராக இருந்த சி.வி. சண்முகம், தொடர்ந்து இரு முறை வெற்றி பெற்ற விழுப்புரம் தொகுதியையும் அதிமுகவிடம் இருந்து திமுக தட்டிப் பறித்துள்ளது.

அதே நேரத்தில் திண்டிவனம், வானூர் தொகுதிகளில் அதிமுகவும், மயிலம் தொகுதியை அதிமுக கூட்டணி கட்சியான பாமகவும் கைப்பற்றியது.

இதற்கிடையே சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தோல்வி அடைந்தது குறித்து அதிமுகவினர் கூறியது:

2001-ம் ஆண்டு திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்ட சி.வி சண்முகம் வெற்றி பெற்றார். கூட்டணியில் இருந்த பாமகவின் சிபாரிசால், அப்போது அவர் அமைச்சரானதாக பேசப்பட்டது.

2006-ம் ஆண்டு மீண்டும் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதன் பின் விழுப்புரம் தொகுதியில் 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் சி.வி. சண்முகம் தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்றார்.

தற்போது விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட, திமுக வேட்பாளர் லட்சுமணனிடம் முதன்முறையாக சிவி.சண்முகம் வெற்றிவாய்ப்பை இழந்தார்.

சிவி சண்முகத்தின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் பெரும்பங்கு வகிப்பது அவரது மூத்த சகோதரர் சிவி ராதாகிருஷ்ணன். அவரின் தேர்தல் வியூகங்களை கண்டு எதிர்கட்சிக்காரர்களும் பிரமித்தது உண்மைதான்.

அதே நேரம் கட்சி, அதிகார விவகாரங்களில் அவரின் பங்குஇருந்தது. இதனால் சிவி சண்முகத்தின் அமைச்சர் பதவியையும், கட்சி பதவியையும் அதிமுக தலைமை பறித்தது.

விழுப்புரம் தொகுதிக்கு, புதிய சட்டக் கல்லூரி, மகளிர் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததால்

மீண்டும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் களம் இறங்கினார். ஆனால், அதிமுகவில் உண்மையான கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற புகார் நீண்ட நாட்களாக நிலவியது. இதனை கண்டு கொள்ளாமல், அலட்சியப்போக்குடன் அமைச்சரின் ஆதரவாளர்கள் செயல்பட்டு வந்தனர்.

நிர்வாகிகளை நம்பவில்லை

தேர்தல் பணியின் போது, கட்சி நிர்வாகிகளை நம்பி பொறுப்பை ஒப்படைக்காமல், புதிய நபர்கள் களமிறக்கப்பட்டனர். அதில், பல பேர் வந்த வரை லாபம் என கையில் கிடைத்ததை சுருட்டிவிட்டனர்.

விழுப்புரத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் லட்சுமணன், ஏற்கெனவே அதிமுகவில் மாவட்ட செயலாளரான இருந்தவர். சி.வி சண்முகத்தின் பலவீனங்களை லட்சுமணன் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு வெற்றியும் பெற்றார் என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT