மதுரை மாவட்டத்தில் சென்ற முறை 8 தொகுதிகளில் வெற்றிப்பெற்ற அதிமுக இந்த முறை அதில் 3 தொகுதிகளை இழந்துள்ளது. வேட்பாளர் தேர்வில் கோட்டை விட்டது, கூட்டணிக்கு தொகுதியை தாரை வார்த்தது போன்ற காரணங்களால் அதிமுக சென்ற முறை வெற்றி பெற்ற தொகுதிகளை தக்க வைக்க முடியவில்லை.
மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மேற்கு, வடக்கு, மத்தி மற்றும் தெற்கு தொகுதிகள், மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், சோழவந்தான் ஆகிய 10 தொகுதிகள் உள்ளன. கடந்த முறை அதிமுக 10 தொகுதிகளிலும் போட்டியிட்டது. இதில் அதிமுக கடந்த முறை திருமங்கலம், திருப்பரங்குன்றம், சோழவந்தான், உசிலம்பட்டி, மேலூர், மதுரை மேற்கு, மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு ஆகிய 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை அதிமுக மதுரை மேற்கு, கிழக்கு, தெற்கு, மேலூர், உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான், திருப்பரங்குன்றம் ஆகிய 8 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது.
மதுரை வடக்கு தொகுதி பாஜகவுக்கும், மதுரை மத்திய தொகுதி பசும்பொன் தேசிய கழகத்துக்கும் ஒதுக்கப்பட்டன. இதில் அதிமுக மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. சென்றமுறை வெற்றி பெற்ற சோழவந்தான், மதுரை தெற்கு, மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட மதுரை வடக்கு, மதுரை மத்தி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அக்கட்சிகள் வேட்பாளர் தேர்வில் கோட்டைவிட்டன. மதுரை மத்தியில் தி.மு.க. 'சிட்டிங்' எம்.எல்.ஏ. தியாகராஜனுக்கு எதிராக அ.தி.மு.க. நேரடியாக களம் இறங்காமல் கூட்டணிக்கு ஒதுக்கியதால் அத்தொகுதியை தி.மு.க. மிக எளிதாக கைப்பற்றியது.
மதுரை வடக்கு தொகுதியில் தொடக்கத்தில் பாஜக அவசரக் கோலத்தில் வேட்பாளரை தேர்வு செய்து அறிவித்தது. திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுகவில் ‘சீட்’ கிடைக்காததால் அந்த தொகுதியில் கடந்த இடைத்தேர்தல் வெற்றிபெற்ற டாக்டர் சரணவன், பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு கட்சியில் சேர்ந்த சில மணி நேரத்திலே உடனடியாக ‘சீட்’ வழங்கியதை அக்கட்சியினரும், வடக்கு தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கியதால் அதிருப்தியடைந்த அந்த தொகுதி அதிமுகவினரும் அவருக்கு பெரியளவில் ஒத்துழைக்கவில்லை. அதனால், அங்கு டாக்டர் சரவணன் கடும் போட்டி கொடுத்தாலும் அங்கு வெற்றிபெற முடியவில்லை.
மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.எஸ்.சரவணன், தான் சார்ந்த சமூக வேட்பாளராகவே அடையாளம் காட்டப்பட்டார். அது அவருக்கு தேர்தலுக்கு முன் சாதகமாக தெரிந்தாலும் பின் அதுவே அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும் இவருக்கும், இந்த தொகுதிக்குட்பட்ட மாநகர செயலாளருமான அமைச்சர் செல்லூர் கே.ராஜூவுக்கும் இணக்கமான உறவில்லை. அதனால் செல்லூர் கே.ராஜூ ஆதரவாளர்கள் தெற்கு தொகுதியில் எஸ்.எஸ்.சரவணனுக்கு வேலை செய்யவில்லை. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் எஸ்.எஸ்.சரவணன், பெயர் சொல்லும்படி தொகுதிக்கு பெரியளவுக்கு எதுவும் செய்யவில்லை. மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கி செயல்படுத்திய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை இவரே கொண்டு வந்ததுபோல் பேசி வந்தார். அது மக்களை எரிச்சலடைய வைத்தது.
மதுரை கிழக்கு தொகுதியில் கடைசி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை பிடித்து ‘சீட்’ பெற்ற அவரது ஆதரவாளரான முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன் எந்த தேர்தல் முன் தயாரிப்பும் இல்லாமல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் சார்ந்த சமூகத்தை பெரிதாக நம்பினார். கடைசியில் அவர்களும் திமுக வேட்பாளர் மூர்த்தி பக்கம் சாய்ந்தனர். மேலும் இவருக்கும், கிழக்கு தொகுதிக்குட்பட்ட புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் விவி.ராஜன் செல்லப்பாவுக்கும் ஏழாம் பொருத்தம். கடந்த மதுரை மக்களவைத் தேர்தலில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ்சத்தியனுக்கு மதுரை தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது, கோபாலகிருஷ்ணன் ‘சீட்’ கிடைக்காத விரக்தியில் சரியாக தேர்தல் பணியாற்றவில்லை. அதனால் இத்தேர்தலில் ராஜன் செல்லப்பா ஆதரவாளர்கள், கோபாலகிருஷ்ணனுக்கு ஈடுபாட்டுடன் தேர்தல் பணியாற்றவில்லை.
சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்ட மாணிக்கம், எம்எல்ஏவாக இருந்த கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மக்களுடன் நெருக்கமாக இல்லை. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக தன்னை காட்டிக்கொள்வதில் இருந்த ஆர்வம், அவரது தொகுதிக்கு தேவையான நலத்திட்டப் பணிகளில் காட்டவில்லை. அதனால் தோல்வியடைந்தார்.